Maniratnam – ஹலோ ஹிந்தி திரையுலகமே அதை முதலில் நிறுத்துங்கள்; எனக்கு பிடிக்கவே இல்லை- மணிரத்னம் ஓபன் டாக்

சென்னை: ManiRatnam (மணிரத்னம்) இயக்குநர் மணிரத்னம் ஹிந்தி திரையுலகம் குறித்து தக்‌ஷின் மீடியா மாநாட்டில் பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், அவர் பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை கொடுத்துவருகின்றனர்.

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் (சிஐஐ தக்‌ஷின்) உச்சி மாநாடு சென்னையில் இருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றுவருகிறது. இதில் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டு பேசிவருகின்றனர். நேற்றுகூட இயக்குநர் வெற்றிமாறன் தென்னிந்திய சினிமாக்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்றது.

மாநாட்டில் மணிரத்னம்: இந்நிலையில் இயக்குநர் மணிரத்னமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ” இந்தி திரையுலகம் தன்னை பாலிவுட் என்று குறிப்பிடுவதை நிறுத்தினால், இந்திய சினிமாவை வெளிநாடுகளில் உள்ளவர்கள் பாலிவுட் என்று அடையாளப்படுத்துவதை மக்கள் நிறுத்திவிடுவார்கள். கோலிவுட், பாலிவுட் என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. இந்திய சினிமாவை ஒட்டுமொத்தமாக பார்ப்பது நல்லது” என பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் தில் சே (உயிரே), குரு, ராவணன் ஆகிய படங்கள் நேரடியாக ஹிந்தியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் மணிரத்னம் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்னம் இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படமானது ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன்: ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதால் படக்குழு தீவிரமான புரோமோஷனில் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு தனி விமானம் மூலம் செல்லும் படக்குழு இப்போது மும்பையில் முகாமிட்டுள்ளது. சோழர்களின் தலைநகரமாக விளங்கும் தஞ்சாவூருக்கு விரைவில் புரோமோஷனுக்காக படக்குழு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. படமானது பான் இந்தியா படமாக வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் 3 வருகிறதா?: இதற்கிடையே ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி சொல்வது கடினம் என்ற பேச்சு எழுந்தது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் மூன்று மற்றும் நான்கு பாகங்களை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு லைகா நிறுவனம் முழு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.