நெரிசலில் சிக்கி 85 பேர் பலி ஏமனில் நடந்த நிகழ்ச்சியில் பரிதாபம்| 85 people lost their lives in a traffic jam

சனா,ஏமனில் ரம்ஜான் பண்டிகைக்கான உதவி வழங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 85 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு நடக்கும் போர் பாதிப்பு காரணமாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அடிப்படை தேவைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, சனா நகரில் உள்ள பள்ளியில் நேற்று வணிகர்கள் சிலர் இலவச உதவிகளை வழங்கினர்.

இவற்றை வாங்க, அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர்.

அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், பதற்றமடைந்த மக்கள் சிதறி ஓடத் துவங்கினர்.

இதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 85 பேர் பலியாகினர்; 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என, ஹவுதி அரசியல் தலைவர் மஹதி -அல்- மஸ்ஹத் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.