சீனாவுக்கு 1 லட்சம் குரங்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை

கொழும்பு: சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை ‘டோக் மக்காக்’ குரங்குகள் உள்ளன. இவற்றை அருகி வரும் இனமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வகைப்படுத்தியுள்ளது.

இலங்கையில் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை குரங்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவை பயிர்களை அழிப்பதாகவும் சில சமயங்களில் மக்களை தாக்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இலங்கை வேளாண் அமைச்சர் மகிந்த அமரவீர கடந்த வாரம் கூறும்போது, “சீனாவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களில் காட்சிப்படுத்துவதற்காக டோக் மக்காக் குரங்குகளை சீனா கேட்டுள்ளது. இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்றார்.

உயிருள்ள விலங்குகள் ஏற்றுமதிக்கு இலங்கை தடை விதித்துள்ள போதிலும் தற்போது பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த ஏற்றுமதி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என இலங்கையில் உள்ள சீன தூதரகம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில் இலங்கை வேளாண் அமைச்சக உயரதிகாரி குணதாச சமரசிங்க நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சீனாவில் உயிரியல் பூங்காவுடன் தொடர்புடைய தனியார் நிறுவனம் ஒன்று, எங்கள் அமைச்சகத்திடம் 1 லட்சம் ‘டோக் மக்காக்’ குரங்குகளை கேட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளால் பயிர் சேதம் ஏற்படுவதால் இக்கோரிக்கையை பரிசீலித்தோம். இவற்றை ஒரே தடவையில் நாங்கள் அனுப்ப மாட்டோம். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலிருந்து அவை பிடிக்கப்படாது. சாகுபடி பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி அவை பிடிக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.