புதுச்சேரி ஆட்டோ டிரைவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது | Puducherry auto drivers wife killed, 3 arrested, including fraudster

புதுச்சேரி : கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு, மாயமானதாக நாடகமாடிய மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். புதைக்கப்பட்ட கணவரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

புதுச்சேரி, அரியாங்குப்பம், மணவெளி பூங்கொடிபுரம், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன், 39 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லுார்து மேரி, 35. இரண்டு மகன்கள் உள்ளனர்.

மார்ச் 29ல், சவாரி முடித்து வீட்டிற்கு வந்தார். அன்று மாலை வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாக, லுார்து மேரி அரியாங்குப்பம் போலீசில், 30ம் தேதி புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் போலீசார் ஆர்வம் காட்டாததால், ஞானசேகரன் பெற்றோர் சிறப்பு அதிரடிப்படை போலீசார் உதவியை நாடினர். அப்பிரிவு போலீசார் ஞானசேகரன் மொபைல் போனை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில், ஞானசேகரனுக்கு கடைசியாக லாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, 30, பேசியது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

லுார்து மேரிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செங்கல், மணல் வியாபாரம் செய்யும் செல்வம், 40, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை ஞானசேகரன் கண்டித்துள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஞானசேகரனை கொலை செய்ய செல்வம், லுார்துமேரி முடிவு செய்தனர்.

அதற்காக, செல்வம் தன் நண்பர் பாலாஜி உதவியை நாடியுள்ளார். கடந்த, 29ம் தேதி ஞானசேகரனை தொடர்பு கொண்ட பாலாஜி, ஆற்றங்கரையோரம் உள்ள சந்தன மரத்தை வெட்டிக் கொடுத்தால் பணம் தருவதாக கூறி, அவரை வரவழைத்துள்ளார்.

தன் இருசக்கர வாகனத்தில், பாலாஜி நோணாங்குப்பம் ஆற்றங்கரைக்கு ஞானசேகரனை அழைத்துச் சென்றார். அங்கிருந்த செல்வம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானசேகரனை வெட்டிக் கொலை செய்து, ஏற்கனவே தயாராக தோண்டி வைத்திருந்த குழியில் தள்ளி புதைத்தனர்.

இதற்கு லுார்துமேரி உடந்தையாக இருந்துள்ளார். பாலாஜி, லுார்துமேரி, செல்வம் கைது செய்யப்பட்டனர்.

புதைக்கப்பட்ட ஞானசேகரன் உடல், தாசில்தார் சேகர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.