அறநிலையத்துறையில் விதி மீறல்: மீண்டும் அதே புகாரை சொல்லும் அண்ணாமலை

அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக ஒதுக்கப்படும் போது அதற்கு மேல் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்க கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திராவிட கட்சிகளை வீழ்த்துமா பாஜக_ அண்ணாமலை ஃபார்முலா என்ன ?

இது தொடர்பாக அவர் நேற்று (மே 4) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும்

கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்கள் பேசுகையில், கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார். அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று பாஜக சார்பாக வலியுறுத்தி வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை தொடர்ந்து பேசிவருகிறார். கடந்த ஜனவரி மாதம் பாஜக சார்பில் அறநிலையத்துறைக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டுல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையே இருக்காது என்று கூறியிருந்தார்.

இதற்கு அப்போதே அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்திருந்தார். “இந்த ஆட்சியில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை 3,943 ரூபாய் கோடி மதிப்புள்ள நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாதுகாப்பு வேலிகள் எச்ஆர்எம்சி என்று பொறிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

அரசின் சொத்துக்களை அபகரித்தோ, வேண்டியவர்களுக்கு சலுகை காட்டி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை, அண்ணாமலை சுட்டிக்காட்டினால் அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் நாங்கள் அதை சரிசெய்ய கடமைபட்டுள்ளோம். இறைவனுடைய சொத்தை யார் களவாடினாலும் அதை அனுமதிக்கூடாதென்று முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலுவை வாடகை பாக்கி ரூ.280 கோடி இரண்டாண்டுகளில் வசூலிக்கப்பட்டுள்ளன” என்று கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.