"டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடா?!"- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆளுநரைச் சந்தித்துப் புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். அதில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கிருஷ்ணசாமி – ஆளுநர் ரவி

ஆனால், டாஸ்மாக் நிறுவனத்தின் இரண்டாண்டுகள் வருமானமே 93,000 கோடி ரூபாய்தான். கிருஷ்ணசாமி அரசியல் கட்சித் தலைவர். அவர் கூறுவதில் அரசியல் இருக்கலாம். ஆனால், அதை ஆராயாமல் சில ஊடகங்கள் அப்படியே செய்தியாக்கின. அதை பார்த்தபோதுதான் வருத்தமாக இருந்தது. அவரிடமும் எந்த எதிர்க்கேள்வியும் கேட்கவில்லை என்பதும் சங்கடத்தை தந்தது. ஊடகங்கள் யார் என்ன கருத்து சொன்னாலும் அதை அப்படியே வெளியிடாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும்.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ‘பார்’ தொடங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்குகள் முடிவுக்கு வரும் வரை ‘பார்’களை திறக்க முடியாது. ஆனால் இதைத் தெரிந்துகொண்டே அரசின்மீது ஊடகங்கள் தொடர்ந்து குற்றம்சுமத்தி செய்திகளை வெளியிடுகின்றன. டாஸ்மாக் நிறுவனம் எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் தொடர்பாக கருத்துச் சொல்லும் சில எதிர்க்கட்சிகள்.. அருகிலிருக்கும் கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு சம்பந்தமான கொள்கையை முன்மொழிகின்றபோது, நிச்சயம் தமிழ்நாடு அரசும் நல்ல முடிவெடுக்கும். இந்த ஆண்டு 500 கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் கடைகளில் மதுவின் விலைக்கு மேல் பத்து ரூபாய் வாங்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

குறிப்பிட்ட விலையைவிட அதிக தொகை வாங்கப்படும் கடைகளின் எண்ணைக் குறிப்பிட்டு புகாரளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்களில் சிக்கிய 1,977 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 5.5 கோடி ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தால், பணியிட மாற்றம் செய்யப்பட்ட பணியாளர்களிடமோ, அல்லது அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளிடமோ எந்த காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று விசாரிக்காமல், தொழிற்சங்கங்கள் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின்

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்திருப்பது விரும்பத்தகாத சம்பவம். அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் ஆட்சிக்காலத்தில் 20 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானார்கள். ஆனால் இது தொடர்பாக அவரிடம் யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. வரக்கூடிய காலங்களில் இது போன்ற சூழல் நடந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. மேலும், விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில், தொடர்புடையவர்கள் மற்றும் புகார்தாரர்களுக்கு மத்தியில் சமரசம் ஏற்பட்டு அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் புகார் தெரிவிக்கின்றபோதும், வழக்கைப் பதிவு செய்கிறபோதும் என்னுடைய பெயர் அதில் இல்லை. அதன் பிறகு சில அரசியல் சூழலுக்காக விசாரணையில் என் பெயர் சேர்க்கப்பட்டது. அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மிகத் தெளிவாக முடிவு பெற்றது.

உச்ச நீதிமன்றம்

ஆனால், இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள்தான் அதைத் தற்போது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவு வழங்கியிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். அமைச்சராக இருப்பதால் விசாரணை சரியாக நடக்காது என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்கு முன்பு குட்கா வழக்கில் சிக்கியிருந்த ஒருவர், அப்போது அமைச்சராகத்தான் இருந்தார். அவரிடம் இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படவில்லையே?

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, நான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஆனால், அவர் ஆட்சியில் இருக்கும்போது, அவருடைய அமைச்சர்கள் சில வழக்குகளில் சிக்கியபோது, அப்போதைய முதல்வராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர், குற்றம்சாட்டப்பட்டவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.

செந்தில் பாலாஜி

மேலும், அவர்மீதே கொடநாடு முதல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குவரை தொடரப்பட்டது. அப்போதாவது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தால் இப்போது என் ராஜினாமா குறித்து தாராளமாக அவர் பேசலாம்…. எனவே, இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.