இந்த தீர்ப்பு எங்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கடந்த 07.05.2014-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர தடை விதித்ததை எதிர்த்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் முதன் முதலாக 07.06.2014 அன்று மதுரை பழங்காநத்தத்தில் மாபெரும் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தோம். 09.03.2017 அன்று தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தால் தடை நீக்கப்பட்டு போராட்டம் சிறந்த வெற்றி கண்டது.

கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்கள் இயற்றியதற்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த போட்டிக்கு தடை விதிக்க முடியாது என்று வரலாற்று சிறப்புமிக்க உணர்வுப்பூர்வமான தீர்ப்பினை வழங்கியது தமிழர்களுக்கும், வெவ்வேறு விதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களுக்கும் மகிழ்வளிக்கும் செய்தியாகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்திற்கான இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், மக்கள் சக்திக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் பெருமிதம் கொள்கிறோம். தாய் மண்ணின் அடையாளத்தை மீட்க போராடி வெற்றி கண்ட நாம், மது மற்றும் போதையால் ஏற்படும் சமூக சீரழிவை எதிர்த்தும் தொடர்ந்து போராடி, மக்கள் நலனை மீட்டெடுப்பதிலும், சமூகத்தை சீரமைப்பதில் மாபெரும் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை உதித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.