நீதி அமைச்சு ஏற்பாடு செய்த நடமாடும் சேவையில் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்

நீதி அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் நடமாடும் சேவையில் ஆயிரக்கணக்கான மக்கள் சேவையினை பெற்றுக்கொண்டனர்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த சனிக்கிழமை (27) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, இடம்பெற்ற, இச்சேவையில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா உட்பட சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், 14 பிரதேச செயலாளரகள் எனப் பலர் பங்கேற்றனர்.

இதன் போது மாவட்ட மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, மீண்டும் நாடு திரும்பிய மாவட்ட மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றன.

இந் நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு , பாதுகாப்பு , வெளிநாட்டு அலுவல்கள் , நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ஆகிய அமைச்சுக்கள், ஆட்களை பதிவு செய்யும் , குடிவரவு, குடியகல்வு , தலைமைப் பதிவாளர் போன்ற திணைக்களங்கள் , மாகாண காணி ஆணையாளர், இழப்பீடுகள், காணாமல்போன ஆட்கள், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான அலுவலகங்கள், மத்தியஸ்த சபை, சட்ட உதவி ஆணைக்குழுக்கள் போன்றவற்றின் சேவைக் கூடங்களுக்கு வருகை தந்த மக்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.

தேசிய அடையாள அட்டை பெறுதல், திருத்தம் மற்றும் காணாமல் போன அடையாள அட்டைகளுக்கான இரண்டாவது பிரதி, பிறப்பு, விவாகம், மற்றும் இறப்புப் பதிவும் பெறுதலும், காணி உரிமை, பதிவு, பிணக்குகள் போன்றவற்றிக்கான தீர்வுகள், மீள்குடியேற்றம், இழப்பீடு போன்றன குறித்த குறைபாடுகள், காணாமல் போனோர் தொடர்பான ஆவணங்களை பெறுதல் போன்ற விடயங்களுக்காக, சமூகமளித்த மக்களால் அதிகமான சேவைகள் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.