"இளையராஜா சார் பாட்டைப் பாடனும்ன்னா, இனி…"- திரையிசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா சொல்வது என்ன?

பாடல்களுக்கான காப்புரிமை (ராயல்டி) தொகையை நலிந்த இசைக் கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இளையராஜா பத்திரம் எழுதியிருக்கிறார். திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவரான தினாவிடம் அந்தப் பத்திரத்தை இளையராஜா ஒப்படைத்துவிட்டார் என்று ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. இது குறித்து தினாவிடமே பேசினேன்.

விக்ரமின் ‘கிங்’, பிரபுவின் ‘மிடில்கிளாஸ் மாதவன்’, தனுஷின் ‘திருடா திருடி’ உட்படப் பல படங்களுக்கு இசையமைத்தவர் தினா. இப்போது இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். காப்புரிமை விஷயம் குறித்து அவரிடம் கேட்டதும், அவர் சொன்ன பதில் இதுதான்.

இளையராஜாவுடன் தினா

“உண்மைதான். இசைஞானியின் பாடல்களுக்கான காப்புரிமைகளுக்கான மேற்பார்வையினைச் செய்யும் பொறுப்பைத்தான் ராஜா சார் எங்கிட்ட கொடுத்திருக்கார். பாடல்களின் காப்பிரைட் யாருக்கேனும் வேணும்னா, அவங்க தாராளமா திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம். இசைக்கச்சேரிகளில் இசைஞானியின் பாடல்களை பாடுறாங்கன்னா, எத்தனை பாடல்கள் பாடுறாங்கன்னு கேட்டு, அதுக்கான காப்புரிமை விஷயங்களை நாங்களே செய்து கொடுக்கிறோம்.

உதாரணமா, கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கிறது என்றாலோ, அல்லது சாட்டிலைட் டிவிக்களுக்கோ, அல்லது புதிய படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கு ரீமிக்ஸ் பண்ண விரும்பினாலோ, அவங்க எந்தெந்த பாடல்கள் விரும்புறாங்களோ அந்தப் பாடல்கள் குறித்த விவரங்களை எங்களிடம் சொன்னால் போதும். நாங்க அதுக்கான காப்புரிமை உள்ளிட்ட விஷயங்களை ஏற்பாடு செய்து தருவோம். சில நேரங்களில் ராஜா சாரே நேரடியா அந்தப் பொறுப்பை எடுத்துக்குவார். இல்லனா அவர் சார்பில் ஶ்ரீராம் சாரோ அல்லது நானோ அந்தப் பொறுப்பை எடுத்து பார்த்துக்குவோம்.

இவ்வளவு பெரிய பொறுப்பை ராஜா சார் எங்களிடம் கொடுத்திருக்கார்ன்னா, அவரது பாடல்கள் பெரும்பான்மையானவற்றை நாங்களே வாசிச்சிருக்கோம். அதனால நாங்க சரியா பார்த்துக்குவோம்னு அவர் நம்புறார்.

இளையராஜா

எங்க சங்கத்தில் மொத்தம் 1223 உறுப்பினர்கள் இருக்காங்க. இந்த நேரத்தில் ராஜா சாருக்கு நாங்க நன்றி சொல்லிக்க விரும்புறோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, எங்களோட இசைக்கலைஞர்கள் சங்கத்தை ராஜா சார் புதுப்பிச்சு தருவதாகச் சொல்லியிருந்தார். கொரோனா சூழலினால் அதுக்கான வேலைகளைத் தொடங்க முடியாமல் போயிடுச்சு. சமீபத்தில் அவரோட பிறந்தநாளில் எங்களுக்கு அந்த ஒப்புதலைக் கொடுத்துட்டார். இனி எங்க அறக்கட்டளையின் ஒப்புதல், சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒப்புதலும் கிடைத்த பிறகு, கட்டட வேலைகளைத் தொடங்கிடுவோம். கட்டடப் பணியினைத் தொடங்க சம்மதம் சொன்ன ராஜா சாருக்கு எங்க சங்கம் சார்பாக நன்றி சொல்லிக்கறோம்” என்கிறார் தினா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.