பருவநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகள் முன்னுரிமை கொடுக்கவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பருவநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகள் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிக்காக வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “உலகின் பருவநிலையைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் சிந்திக்க வேண்டியது அவசியம். இதில், சுயநலத்திற்கு இடம் இருக்கக் கூடாது. நீண்ட காலமாகவே முன்னேறிய நாடுகளின் வளர்ச்சி முன்னுதாரணமானதாக இருக்கவில்லை. முதலில் நம் நாட்டை வளமாக்குவோம்; பிறகு சுற்றுச்சூழலைப் பற்றி சிந்திப்போம் என்பதே வளர்ந்த நாடுகளின் சிந்தனையாக இருந்தது. இதன் மூலம் வளர்ச்சியின் இலக்குகளை அந்த நாடுகள் அடைந்தன. ஆனால், உலகின் சுற்றுச்சூழல், அவர்களின் வளர்ச்சிக்கான விலையை செலுத்த வேண்டியிருந்தது.

இன்றும் சில வளர்ந்த நாடுகளின் தவறான கொள்கைகளுக்கான விலையை உலகின் வளரும் மற்றும் ஏழை நாடுகள் கொடுக்கின்றன. வளர்ந்த நாடுகளின் இந்த அணுகுமுறையை பல பத்தாண்டுகளாக யாருமே எதிர்க்கவில்லை. ஆனால், இந்த அனைத்து நாடுகளிடமும் பருவநிலை நீதி குறித்த கேள்வியை இந்தியா எழுப்பி இருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா தனது வளர்ச்சிக்காக எவ்வாறு கவனம் செலுத்துகிறதோ அதேபோல சுற்றுச்சூழலிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதுதான் இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருள். இது பற்றி இன்று உலகம் பேசுகிறது. ஆனால் கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளாக இந்தியா இதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்க 2018 ஆம் ஆண்டிலேயே இந்தியா இரண்டு நிலைகளில் செயல்படத் தொடங்கியது. ஒருபுறம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தோம்; மறுபுறம் பிளாஸ்டிக் கழிவுகளை பதப்படுத்துவதை கட்டாயமாக்கினோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியா பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தி மீது அதிக கவனம் செலுத்தியுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.