டார்கெட் 450… பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம்… பகல் கனவா? பலே பாலிடிக்ஸா?

இந்தியாவை அசுர பலத்துடன் ஆட்சி செய்து வரும் கட்சியாக பாஜக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற விஷயங்களால் மக்கள் நெருக்கடிகளை சந்தித்த போதும், மீண்டும் பாஜகவே ஆட்சிக் கட்டிலில் அமர வாய்ப்பளித்தனர். வடக்கில் இருந்த பெரிய ஆதரவு அலை தான் வெற்றி பெற வைத்தது என்ற பேச்சும் உண்டு.

எதிர்க்கட்சிகள் கைகோர்ப்பு

இதில் மற்றொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கவில்லை. இத்தகைய தவறுகளை சரிசெய்து இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. மாநில கட்சிகள் செல்வாக்கு பெற்று விளங்கும் இடங்களில்
காங்கிரஸ்
விட்டு கொடுக்க வேண்டும். காங்கிரஸ் செல்வாக்குள்ள இடங்களில் மாநிலக் கட்சிகள் விட்டு கொடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியதை நினைவு கூற வேண்டியுள்ளது.

பட்னாவில் முக்கிய முடிவு

இதற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் இம்மாத இறுதியில் பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதனை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்து நடத்தவுள்ளார். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

நிதிஷ் குமார் திட்டம்

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கறாரான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது தான் சரியான முடிவை உடனடியாக எடுத்து வேகமாக காய் நகர்த்தலாம் என்பது நிதிஷ் குமாரின் திட்டம். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் பாட்னாவிற்கு கூடுதல் சிறப்புண்டு.

ஜெய பிரகாஷ் நாராயண் நினைவலைகள்

எமர்ஜென்சிக்கு எதிராக ஜெய பிரகாஷ் நாராயண் கிளர்ந்தெழுந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் புரட்சியை விதைத்தது இங்கே தான். அன்று காங்கிரஸிற்கு எதிராக ஒன்று கூடினர். தற்போது பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தயாராகி வருகின்றனர். அவ்வளவு தான் வித்தியாசம். மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 450 இடங்களில் பாஜகவை நேருக்கு நேர் நின்று எதிர்க்கட்சிகள் போட்டியிட வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஒருமித்த ஆதரவு

பாஜகவை எதிர்த்து நிற்கும் கட்சிக்கு மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த ஆதரவு அளிக்க வேண்டும். இதை கச்சிதமாக செய்து காட்டினால் வாக்குகள் சிதறாது. குறிப்பிட்ட தொகுதியில் எந்த அரசியல் கட்சி வலுவாக இருக்கிறதோ, அவர்கள் போட்டியிடுமாறு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். அப்போது தான் வெற்றியை சரியாக தட்டி தூக்கலாம். ஈகோ யுத்தமாக மாறினால் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த திட்டமும் பாழாகிவிடும் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.