பால் வளத்துறை அமைச்சர் சொல்றது பொய்… அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பணி அமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததால் அந்த சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த செய்தி ஊடங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டதற்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் தமிழக பால்வளத்துறை அமைச்சர்ஈடுபட்டிருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு என்று கூறியுள்ள அண்ணாமலை, பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், உண்மை நிலை நேரெதிராக இருக்கிறது. சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல் அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திமுக அரசு, தற்போது, குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது என்றும் அண்ணாமலை விளாசியுள்ளார்.

மேலும் சிறார்களை பணியில் அமர்த்தியவர்கள் அத்தனை பேர் மீதும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசு பணிகளில் இடம்பெறாத வண்ணம், கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.