பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது

• ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நியமிப்பதற்கான கால அட்டவணையைத் தயாரிக்கும் வரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மதிப்பீட்டில் தாமதம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியது.

பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இதில் விவாதிக்கப்பட்டதுடன், சூதாட்ட நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணைக்குழுவை நிறுவவதற்கான கால அட்டவணையை உருவாக்கும்வரை குறித்த சட்டமூலத்தை மதிப்பீடு செய்வது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கசினோ வர்த்தகம் தொடர்பான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்டதாகவும், நிதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட காலக்கெடுவின் பிரகாரம் 2023 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அது நடக்கவில்லை என்றும், எனவே புதிய திட்டத்துக்கான கால அட்டவணை தயாரிக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் குழு குறிப்பிட்டது. அதற்கமைய பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தைப் பரிசீலிக்க ஒரு வாரத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவைக் கூட்டுவதற்கும் முடிவுசெய்யப்பட்டது.

மேலும், 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ துமிந்த திஸாநாயக்க, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சுமித் உடுகும்புர, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.