WTC Final: ஜாம்பவானை முந்திய ஜடேஜா… டெஸ்டில் புதிய சாதனை – என்ன தெரியுமா?

World Test Championship Final 2023: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியுள்ள நிலையில், இந்திய அணி ஏதும் மாயாஜாலம் நிகழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்களையும், இந்தியா 296 ரன்களையும் எடுத்தது. தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர், கவாஜா ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த ஸ்மித், ஹெட் ஆகியோர் அதிரடியாக ஆடினாலும் அவர்களை ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார். நேற்றைய மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. 

போராடும் இந்தியா

இந்நிலையில், மார்னஸ் லபுஷேன், கேம்ரூன் கிரீன் ஆகியோர் இன்றயை நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். லபுஷேன் 41 ரன்களில் தொடக்க ஓவர்களிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரியுடன் நிதானமாக விளையாடி வந்த கிரீன், ஜடேஜா பந்துவீச்சில் சீக்கினார். இதனால், இன்றைய நாளின் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி, (70 ஓவர்கள்) 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்துள்ளது. மேலும், அந்த அணி 374 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. கேரி 41 ரன்களுடனும், ஸ்டார்க் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

பேடியை முந்திய ஜடேஜா!

மேலும், ஜடேஜா இன்றைய போட்டியில் கிரீன் விக்கெட்டை எடுத்தபோது, ஒரு பெரும் மைல்கல்லை அடைந்தார். அதாவது, டெஸ்ட் அரங்கில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். தற்போது 65 போட்டிகளில் விளையாடி 267 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இதற்கு முன், மூத்த வீரர் பிஷன் சிங் பேடி 67 போட்டிகளில் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது, இவரை ஜடேஜா பின்னுக்கு தள்ளினார். மேலும், சர்வதேச அளவில் ஜடேஜா நான்காவது இடத்தில் உள்ளார். 

It’s Lunch on Day 4 of the #WTC23 Final!
Wickets for #TeamIndia in the First Session
Runs for Australia

We will be back for the Second Session soon.

Scorecard https://t.co/0nYl21pwaw pic.twitter.com/X8nLIJVr9C

— BCCI (@BCCI) June 10, 2023

சுழல் அரக்கர்கள்!

இலங்கையின் ரங்கனா ஹெராத் 433 விக்கெட்டுகள் (93 போட்டிகள்), நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 362 விக்கெட்டுகள் (113 போட்டிகள்), இங்கிலாந்தின் டெரேக் அண்டர்வுட் 297 விக்கெட்டுகள் (86 போட்டிகள்) என அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.