இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து பிரான்ஸ் தூதுவருடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் அதிமேதகு ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தார்.

கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 08) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பேக்டெட் அவர்கள் இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

1948ஆம் ஆண்டு தொடக்கம் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்ட கால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், சிறந்த இருதரப்பு உறவுகள் சுமார் 75 வருடங்களாக இருந்து வருவதாகவும், இது மேலும் பல வருடங்கள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையானது உலகில் எழுத்தறிவு வீதம் அதிகம் உள்ள நாடாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் கடல்சார் பயிற்சிக் கல்லூரி ஒன்றினை இலங்கையில் நிறுவுவது குறித்து ஆய்வு செய்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின் போது பிரான்ஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆரேலியன் மெயில்லெட் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகாரி கொமாண்டர் ஜீன்-பாப்டிஸ்ட் ட்ரூச் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

துகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.