கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர் மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு – ரூ.112 கோடி கூடுதல் நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், ரூ.112 கோடி கூடுதல் நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில் 66,025 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள், கிராம ஊராட்சிகளில் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து, அவற்றை தரம் பிரித்து, உரமாக மாற்றும் பணியை செய்கின்றனர். இதன்மூலம் கிராமம் தூய்மையடைவது உறுதி செய்யப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு மூன்றுசக்கர வாகனங்கள், மின் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தொட்டிகள், கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.2,600 வீதம் மதிப்பூதியம் வழங்க, மாநில நிதி ஆணையத்தின் மானியத்தில் ரூ.206.04 கோடி ஒதுக்கப்பட்டது. ஊராட்சிக்கான சேமிப்பு கணக்கில் அந்த நிதி வரவு வைக்கப்பட்டு, மாதம்தோறும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2020-ல் மதிப்பூதியத்தை ரூ.2,600-ல் இருந்து ரூ.3,600 ஆக உயர்த்தி அப்போதைய அரசு உத்தரவிட்டது. மாநில நிதி ஆணையத்தின் மானியத்தில் இருந்து ரூ.285.68 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ‘மாதம் ரூ.3,600 மதிப்பூதியம் போதுமானதாக இல்லை. இதை உயர்த்தி தரவேண்டும்’ என்று பல்வேறு தரப்பில் இருந்தும் ஆட்சியர்களுக்கு கோரிக்கைகள் வந்தன.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக ரூ.112 கோடி ஒதுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இதை செயல்படுத்தும் வகையில், தூய்மைக் காவலர் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 66,130 தூய்மைக் காவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க ரூ.396.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.