தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்… பல மணிநேர சோதனை முதல் தலைவர்கள் கண்டனம் வரை?!

ஜூன் 13-ம் தேதி காலை 7 மணிக்கு சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்ய அமலாக்கத்துறையினர் வருகை தந்தனர். இந்த நிலையில், அங்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வங்கி பரிவர்த்தனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் அடிப்படையில் தலைமைச் செயலகத்துக்கு சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

உள்ளே நடந்தது என்ன ?

சரியாக, நண்பகல் 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் மற்றும் பொதுத்துறை செயலாளரிடம் முறைப்படி அனுமதி பெற்று சோதனையை தொடங்கியுள்ளனர். ஆனால், சோதனை குறித்த தகவல் 1 மணிக்குதான் வெளிய கசிந்தது.

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

இந்த நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சரும், “ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா? தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது” என கண்டனம் தெரிவித்திருந்தார்.

`14 மணிநேரம் நடந்த சோதனை!’

11.30 மணிக்கு தொடங்கிய சோதனையில், 3 அமலாக்கத்துறை அதிகாரிகளும் 2 வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டனர். அதில் சரியாக 4.45 மணிக்கு 1 அதிகாரி மட்டும் அறையை விட்டு வெளியேறியிருக்கிறார். அதன்பின்பும் சோதனை நள்ளிரவு 3 மணி வரையும் தொடர்ந்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே நிகழாத ஒரு சம்பவமாக தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அலுவலகத்துக்குள்ளே அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்து கிட்டத்தட்ட 14 மணிநேரம் சோதனை நடத்தியிருக்கின்றனர். உள்ளே டெண்டர்கள் மற்றும் கம்யூட்டர் ஹார்டுவேர்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

தலைவர்கள் கருத்து என்ன?

மாநில அரசின் உயிர் நாடியாகக் கருதப்படும் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளே சென்றது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயர்மட்ட அரசியல் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ திமுக மீதான பாஜக-வின் அரசியல் பழிவாங்கலைக் கண்டிக்கிறேன், அமைச்சரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என கருத்து தெரிவித்திருந்தார்.

கெஜ்ரிவால், மம்தா

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்தவும் மிரட்டுவதற்கும் மத்திய அமைப்புகளைத் தவறாகப் பாஜக பயன்படுத்துகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மீதான அமலாக்கத்துறை சோதனையை கண்டிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளைக் கடுமையாக கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், ஜனநாயக விரோதமாக மத்திய அரசுக்கு நடக்கிறது. மத்திய அரசின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்களை நசுக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறையை ஏவியிருக்கிறார்கள்” எனக் கூறினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, “அமைச்சர் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தியிருக்கிறது” என்றார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது செய்தது கண்டனத்திற்குறியது. இது பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி, சரத் பவார்

இவ்வாறாக தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். `மாநில சுயாட்சி’ குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கும் அதேவேளையில், கடந்த 2016-ம் ஆண்டு தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் நடத்திய சோதனையை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கண்டித்தாரே தவிர, அன்று ’மாநில சுயாட்சி’ குறித்து பேசவில்லையே என்னும் விமர்சனமும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.