தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையில் மனக்கசப்பு…? – மௌனம் கலைத்த சிஎஸ்கே சிஇஓ!

MS Dhoni Jadeja: சுமார் இரண்டு மாதங்களாக நடைபெற்ற 16ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மே மாதம் நிறைவைடந்தது. இந்த தொடர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் குறிப்பாக கேப்டன் தோனிக்கும் மறக்க முடியாத தொடராக அமைந்தது எனலாம். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் அணியுடனான இறுதிப்போட்டியில் கடைசி பந்து வரை சென்று, ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டால் சிஎஸ்கே கைப்பற்றியது. 

தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்ற அவர் அறிவித்த பின், அவரது ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அடுத்த சீசனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தோனி, 2022ஆம் ஆண்டிலேயே தனது கேப்டன்ஸியை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்தாலும், சில  காரணங்களுக்காக ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் தோனிக்கே கேப்டன்ஸி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 2022இல் 9ஆவது இடத்தில் நிறைவு செய்த சென்னை அணி, இந்த சீசனில் சாம்பியனாகிவிட்டது. 

ஜடேஜாவிடம் இருந்து கேப்டன்ஸி பொறுப்பை வாங்கியதால் தோனி, அணி நிர்வாகத்தினர் மீது ஜடேஜா அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்பட்டது. 2023 தொடருக்கான மினி ஏலத்திற்கு முன் ஜடேஜா அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில், தோனியின் தலையீட்டால் ஜடேஜா சிஎஸ்கேவில் தொடர்ந்தார் என்றும் பேச்சுகள் இருந்தன. 

இது ஒருபுறம் இருக்க, தோனிக்கும், 2023 சீசனின்போதே, ஜேடஜாவுக்கும் இடையே மனக்கசப்பு உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, டெல்லி அணியுடனான போட்டியில், ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை கசியவிட்டிருந்தார். அந்த போட்டிக்கு பின், ஜடேஜா – தோனி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், தோனி ஜடேஜாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க ஜடேஜா அதை பொருட்படுத்தாமல் அதிருப்தியாக காணப்பட்டதாக வதந்திகள் பரவின. 

அதுமட்டுமின்றி, ஜடேஜா அவரது ட்விட்டரில்,”கர்மா உங்களுக்குத் திரும்பும், விரைவில் அல்லது பின்னர் அது நிச்சயமாக வரும்” என்ற வாக்கியம் அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டு, ‘நிச்சயமாக’ என குறிப்பிட்டிருந்தார். இது அந்த மனக்கசப்பு தகவல்களை வலுவாக்கியது. ஆனால், இதுகுறித்து அணி நிர்வாகம் சார்பில் யாரும் வாய் திறக்கவில்லை. அதுமட்டுமின்றி, பல போட்டிகளில் தோனி களத்திற்கு வர ஜடேஜா அவுட்டாகும்படி, சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் தொடர்ந்து கூச்சலிடுவதும் பெரிதாக விவாதிக்கப்பட்டது. 

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அதில்,”ஜடேஜாவை பொறுத்த வரையில் அவர் சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங் செய்யும்போது, ருதுராஜ், கான்வே, மொயீன், ரஹானே போன்ற பேட்டிங் வரிசைக்குபின் அவர் [ஜடேஜா] பேட்டிங் செய்யும்போது, அவருக்கு 5-10 பந்துகள் மீதம் இருந்தன. இதுபோன்ற சூழ்நிலைகளில், அது சில நேரங்களில் கைக்கொடுக்கும் அல்லது கைக்கொடுக்காது. 

ஆனால் விஷயம் என்னவென்றால், தோனி அடுத்ததாக வருவார் என்பது அவருக்கும் தெரியும். மேலும் அவர் சில நேரங்களில் 2-3 பந்துகளைப் பெறுவார். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் உள்ளே செல்லும் போதெல்லாம், கூட்டம் தோனியை வரவேற்றது. ஒரு விதத்தில், அவர் காயப்பட்டிருக்கலாம். அந்த விஷயத்தில் எந்த வீரருக்கும் அந்த அழுத்தம் இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு ட்வீட் போட்டாலும் அதைப் பற்றி குறை சொல்லவில்லை. 

இது அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதியாகும். கடைசி ஆட்டத்திற்குப் பிறகு, மக்கள் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்தார்கள் மற்றும் நான் ஜடேஜாவை சமாதானப்படுத்துகிறேன் என்று கருதினர். ஆனால் அது அப்படி இல்லை. நான் அவருடன் போட்டியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், அவர் என்ன செய்தார். எங்களுக்கு வேறு எந்த விவாதமும் இல்லை. ஒரு குழு சூழலில் அனைவருக்கும் தெரியும், டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது, வெளியே யாருக்கும் அந்தரங்கம் இல்லை. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எப்போதும் தோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். இறுதிப் போட்டிக்குப் பிறகும், ‘இந்த ஆட்டத்தை தோனிக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார். அந்தவகையில் தோனி மீது அவருக்கு இருக்கும் மரியாதை உங்களுக்கு புலப்படும்” என்றார்.

மேலும் படிக்க | IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்குள் வரும் வாசிம்-வகார் போன்ற ஜோடி
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.