ஐபிஎல் தொடரில் சரவெடியாக ஆடிய ரிங்கு சிங்குக்கு பதிலாக இவரை ஏன் எடுத்தீங்க – பிசிசிஐ மீது முன்னாள் வீரர் காட்டம்

ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான தொடர்களிலும் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில், அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. 20 ஓவர் தொடரில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அந்த அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண இருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விதமாக டெஸ்ட் போட்டிக்கு ரஹானே துணைக்கேப்டனாகவும், டி20 அணியில் திலக் வர்மாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆகாஷ் சோப்ரா சில காட்டமான கேள்விகளை பிசிசிஐ நோக்கி எழுப்பியுள்ளார். 

ரிங்கு சிங் அபாரம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், அபரமான பேட்டிங் மூலம் ஸ்டார் பிளேயராக இந்த சீசனில் ஜொலித்தார். பினிஷராக களம் கண்ட அவர், இந்த தொடர் முழுவதும் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசியதுடன் வெற்றிபெறவே முடியாது என நினைத்த ஆட்டங்களை எல்லாம் அதிரடி ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணியை வெற்றி வாகை சூட வைத்தார். இதனால் அந்த அணியின் நம்பிக்கை நாயகனாக மிளிர்ந்த அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியில் அவருக்கு வாயப்பளிக்கப்படவில்லை

திலக் வர்மாவுக்கு வாய்ப்பு

அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தாலும், ரிங்கு சிங் பினிஷர் ரோலில் அபாரமாக ஆடினார். அதனால் திலக் வர்மாவை ஒப்பிடும்போது, அணியின் வெற்றிக்கு பங்களிப்பதிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் சிறப்பாக ஆடி அணியை கரைசேர்ப்பதிலும் வல்லவராக ரிங்கு சிங் திகழ்கிறார் என்பதால் அவருக்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும் பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சர்பிரைஸாக திலக் வர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகாஷ் சோப்ரா காட்டம்

இதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். மிடில் ஆர்டரில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர்.  அந்த இடத்தில் தான் திலக் வர்மாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்திய அணிக்கு நல்ல பினிஷர் தான் தேவை. அதற்கு கச்சிதமாக பொருந்தக்கூடியவர் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் அவரும் தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.