ரூ.4,800 கோடி முறைகேடு புகார்; லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடியை டார்கெட் செய்வதன் பின்னணி என்ன?!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கியதில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு ஊழல் நடைப்பெற்றிருப்பதாகப் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் புகார் தெரிவித்திருந்ததன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. இப்போது மீண்டும் அந்தப் புகார் தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டை தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது எழுப்பியது.

ஆர்.எஸ்.பாரதி

இது தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் 2018-ல் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வர் பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக, ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்குவழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்கான ஒப்பந்தம், முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்குவழிச் சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சேகர் ரெட்டி, நாகராஜன், பி.சுப்பிரமணியம் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம், ரூ.200 கோடி மதிப்பில், மதுரை ரிங் ரோடு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. வண்டலூர் – வாலாஜா சாலை வரையுள்ள நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம், `எஸ்.பி.கே அண்ட் கோ’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களின்கீழ் வரும் சாலைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள், பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு, பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இதன்மூலம், முதல்வராகப் பதவி வகிக்கும் பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆதாயம் அடைந்திருக்கிறார்.

பொது ஊழியர் என்ற முறையில், 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீலுள்ள அனைத்து உட்பிரிவுகளின்படி அவர் தண்டனைக்குள்ளாகும் குற்றம் புரிந்திருக்கிறார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த துறையும் அவரிடமே இருந்தது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, 2018 அக்டோபரில் அளித்த தீர்ப்பில், “முதல்வராகப் பதவி வகிக்கும் பழனிசாமிமீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்தது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருப்பதாகவும், அதனால் அவர்களே விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அதனடிப்படையில் அதன் ஆணையர் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுப்பார் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முஹம்மது ஜின்னா தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காத வகையில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது . ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கமறுத்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பழனிசாமி மீதான லஞ்சப் புகார்மீது மீண்டும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசும்போது, “புலனாய்வு அமைப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும் தரவுகளைத் திரட்டி உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே ஒருவர்மீது வழக்கு தொடுக்கிறோம். இப்படி பல வழக்குகள் தொடரப்பட்டாலும் அதில் அந்தந்த சூழ்நிலைகளுக்கும் காலகட்டத்துக்கும் ஏற்பவே சில வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இப்போது முன்னாள் முதல்வர் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொள்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி

பொதுவாக இது போன்ற வழக்குகளுக்கான தண்டனை என்பது அரிதே. இதில் ஒரு சில வழக்குகள் மட்டுமே விதிவிலக்காக அமைகின்றன. அதோடு வழக்கு நீதிமன்றத்துக்குப் போகும்போது மேல்முறையீடு, அது… இது என்று கிட்டத்தட்ட பல ஆண்டுகள் தொடர்கிறது. அப்படி போகும்போது சில சாட்சிகள் மாறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது” என்கிறார்கள்.

மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க பயன்படுத்துகிறது என்கிற விமர்சனம் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், மாநிலத்தில் அதையேதான் ஆளும் தி.மு.க-வும் இப்போது செய்து கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன், “ `எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது அமலாக்கத்துறைதான்’ எனச் சொல்லி, புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் என்று மோடியே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தன்னிச்சையான அமைப்புகள் ஏதும் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். பா.ஜ.க-வை கொள்கைரீதியாக உறுதியாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க-மீது சலசலப்பை ஏற்படுத்த இ.டி-யைக் கொண்டு வந்து அமைச்சர்களை மிரட்டுகிறார்கள். 18 மணி நேரம் ஒருவரை துன்புறுத்தி, அவசர அவசரமாக கைதுசெய்கிறார்கள். ஆனால், தி.மு.க அரசோ அதுபோல் யார்மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா.

தமிழ் கா.அமுதரசன் – தி.மு.க

முன்னாள் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 12.9.2022-ல் ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறோம். அதை மறுத்து குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். தி.மு.க தேர்தல் வாக்குறிதியிலேயே ஊழல் பெருச்சாலிகள்மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருந்தோம். அதன்படிதான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டாலும், தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதை பார்க்க முடிகிறது. இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால் அவர்களைப்போல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடியையோ, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களையோ துன்புறுத்தவில்லை. அந்த அமைப்புக்கு உண்டான கண்ணியம் இருக்கிறது. மக்கள் பிரதிநிதி என்கிற மரியாதை இருக்கிறது. சட்டம் கொடுத்திருக்கக் கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டு, அதன்படிதான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.