ரூ.10 கூடுதலாக வசூல்! புகார் சொன்னவரை டாஸ்மாக்கில் கும்மியெடுத்த ஏஎஸ்ஐ இடமாற்றம்! பறந்த நோட்டீஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் சொன்ன நபரை உதவி காவல் ஆய்வாளர் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் உதவி காவல் ஆய்வாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விளக்கம் கேட்டும் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும் விற்பனையாளர்கள் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்க கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இருப்பினும் பல கடைகளில் இன்னும் கூட கூடுதல் விற்பனைக்கு தான் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக மதுபிரியர் ஒருவர் குற்றம்சாட்டினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் டாஸ்மாக் கடை முன்பு நின்று ரூ.10 கூடுதலாக வசூலிக்கிறார்கள் எனக்கூறி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்த வேளையில் செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் ராஜா அங்கு வந்தார். அப்போது ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக தெரிவித்த நபரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டினார். மேலும் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க நின்றவர்களையும் லத்தியை காட்டி விரட்டினார்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் போலீஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அதோடு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்தால் போலீசார் தாக்குதல் நடத்துவார்களா?, ஒருவர் மீது தாக்குதல் நடத்த போலீசுக்கு யார் உரிமை அளித்தது? என கேள்வி எழுப்பினர்.

Chengalpattu ASI transffered afte assaulted a person who complained about charging Rs.10 extra in Tasmac

மேலும் பட்டப்பகலில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளரை விட்டுவிட்டு இந்த போலீஸ் மதுபிரியரை தாக்கி அத்துமீறல் செய்துள்ளார் என பலரும் கருத்துகள் தெரிவித்தனர்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் போலீஸ் அதிகாரியின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த வீடியோ பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில் தான் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் ராஜா அதிரடியாக இன்று பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி ராஜா போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணி இடமாற்றத்துக்கான உத்தரவை எஸ்பி சாய் பிரனீத் பிறப்பித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உதவி காவல் ஆய்வாளர் ராஜாவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.