மத்திய அரசின் விதிமுறைகளால் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆபத்தா?!

ஆன்லைன் தடைச் சட்ட மசோதா விவகாரத்தில், தமிழ்நாடு அரசு பலமுறை ஆளுநரின் ஒப்புதல் வேண்டி, தடைச் சட்ட மசோதாவை அனுப்பிவைத்தது. ஆனால், ஆளுநர் அவற்றையெல்லாம் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனால், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அமைச்சரவையில் ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதோடு, அதே நாளில் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த முறை மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. சட்டம் அமலுக்கு வந்தாலும், இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

தமிழக சட்டப்பேரவை

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.

அதில், ‘தமிழக அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது. ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துகளை கோரவில்லை. முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது. திறமை விளையாட்டான ரம்மியை ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இல்லை. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதாக’ விளக்கமளித்தனர்.

மேலும், `ஆன்லைன் விளையாட்டுக்களில் மோசடிக்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு குழு, இரு வாரங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை’ என்று குற்றம்சாட்டி தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

ஆன்லைன் ரம்மி

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுகளின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்து சட்டமியற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.இதனையடுத்து தமிழக அரசின் பதில் வாதத்திற்காக, விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்குத் தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடியது இதில் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “ஆன்லனை் தடை சட்டத்தில், தமிழக அரசு தனியாக எந்தச் சட்டமும் இயற்றி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனவே, சட்ட நிபுணர்கள் யாராவது அதை சுட்டிக்காட்டினால், அதைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், சில திருத்தங்களையும், விதிகளையும் கொண்டு வந்துள்ளது. அதுகூட, இணையவழி சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை, பாதுகாக்கக்கூடிய ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது. அரசுக்கு வருவாயைக் கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டுதான் அமைந்திருக்கிறது.

ரகுபதி

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால், 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பதாக கூறி, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில்தான் விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளனர். இது கண்டிக்கத்தகுந்தது என்பதற்காகவும், இந்த இரண்டு வாதங்களையும் மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போது கட்டுப்படுபவர்கள் நாங்கள், நீதிக்கு தலைவணங்க கூடியவர்கள்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியல், மாநிலப் பட்டியல், மத்திய அரசு பட்டியல் என்று உள்ளது. மாநிலப் பட்டியலில் இருக்கக்கூடிய 34,1,6,33 என்ற விதிகளின்படிதான், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் வரும் பாவமான ஜி.எஸ்.டி வருமானம் எங்களுக்குத் தேவையில்லை. உலக சுகாதார மையம் ஆன்லைன் விளையாட்டைக் கொடிய நோயாக அறிவித்திருக்கிறது. இவற்றை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றார்.

மேலும், செய்தியாளர்கள், `அன்று நாடாளுமன்றத்தில், மாநில அரசுகளுக்கு சட்டமியற்ற உரிமை இருக்கிறது என அமைச்சர் சொல்லியிருக்கிறார். தற்போது உரிமையில்லை என மாற்றிப் பேசுகிறார்களே…’ என்னும் கேள்விக்கு, “மாறுப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம் தான் பா.ஜ.க. அதையெல்லாம் முன்வைத்து வழக்குகளை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “பலவிதமான கட்டுப்பாடுகளை ஆன்லைன் விளையாட்டுகளில் கொண்டு வந்திருக்கிறது என்று மத்திய அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மிக தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசினால் கொண்டு வரக்கூடிய சட்டத் திட்டங்கள். ஏற்கனவே பல மாநிலங்களில் சட்டங்கள் இயற்றிய போதும், இந்த ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்கு சென்று அதற்கான தடையை பெற்றன. அந்த காரணத்தினால் இதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வரும் போது செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. அதைத்தான் நாடாளுமன்றத்தில் மிக தெளிவாக தெரிவித்திருந்தார்கள்.

– நாராயணன் திருப்பதி

இப்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு எந்தவிதமான பங்கும் கிடையாது என்பதை உணர வேண்டும். மத்திய அரசு, மாநில அரசை எதிர்க்கவில்லை. ஆனால், மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்லத்தானே வேண்டும். அதைத்தான் மத்திய அரசு செய்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசு இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளவும் இல்லை. மத்திய அரசின் வழக்கறிஞர் நடைமுறையை, சட்டத்தில் உள்ளதை குறிப்பிட்ட தான் செய்திருக்கிறார். மத்திய அரசு குறித்து இருப்பதினால் அது குறித்து விளக்கம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. மென்சன் செய்ததைத்தான் இங்கு தவறுதலாக சொல்லி வருகிறார்கள்” என்றார்.

இந்த வழக்கில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட வாதங்களை மிக முக்கியமானது.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.