இயல்பு நிலைக்கு திரும்பிய காஷ்மீர்? 34 ஆண்டுகளுக்கு பிறகு.. பாரம்பரிய வழித்தடத்தில் மொகரம் ஊர்வலம்

ஸ்ரீநகர்: உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று மொகரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஷ்மீரில் 34 ஆண்டுகளுக்கு பின்னர் மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்து போரிடலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது.

இங்கு கடைசியாக கடந்த 1987ம் ஆண்டு ஆகஸ்டில் மொகரம் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று இதே பாரம்பரிய வழியில் ஊர்வலம் நடத்த துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அனுமதியளித்திருந்தார். இதனையடுத்து ஸ்ரீநகர் சிவில் லைன்ஸ் வழியாக தொடங்கிய இஸ்லாமியர்களின் அமைதி ஊர்வலம் ஜஹாங்கீர் சவுக், புத்ஷா சவுக், மத்திய தந்தி அலுவலகம், மௌலானா ஆசாத் சாலை வழியாக சென்று டல்கேட்டில் நிறைவடைந்துள்ளது.

காலை 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை மட்டுமே ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நேரம் பகல் 11 மணி வரை நீடிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் கருப்பு நிற உடை அணிந்து கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதுவே 1988ம் ஆண்டுக்கு முன் இந்த பேரணி குருபஜாரில் மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு டால்கேட்டில் நிறைவடையும். இந்த முறை நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட 34 ஆண்டுகளில் ஏராளமான நெருக்கடிகளை காஷ்மீர் சந்தித்திருக்கிறது. 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா உல் ஹக் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். எனவே அந்த ஆண்டு மொகரம் பண்டிகை ஊர்வலத்திற்கு மொகரம் மாதத்தின் 8ம் தேதி அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்தடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக அன்றையிலிருந்து 2022ம் ஆண்டு வரை இந்த நாளில் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் இதே மாதத்தில் 10ம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பாரம்பரியமான பாதையில் இந்த ஊர்வலம் செல்லாமல் அபிகுசார்-ஜாதிபாலில் இருந்து லால்பஜார்-ஜாதிபால் வரை சென்றது. அதிலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தான் பங்கேற்றிருந்தனர். மட்டுமல்லாது பாதகாப்பு கெடுபிடிகளும் அதிகமாக இருந்தன. இருப்பினும் 8ம் தேதி ஊர்வலம் அனுமதிக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு, இந்தியாவில் சிறுபான்மையினரின் வழிப்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுகிறது என பிரிவினைவாதிகள் கூறி வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது இதற்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஊர்வலத்தில் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் பங்கேற்றிருந்தது இதன் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.