2.5 crore loot from 326 people claiming to give profit in one day | ஒரே நாளில் லாபம் தருவதாக கூறி 326 பேரிடம் ரூ.2.5 கோடி அபேஸ்

புதுச்சேரி: ஐரோப்பிய ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, ஒரே நாளில் லாபம் தருவதாக கூறி, புதுச்சேரியில் 326 பேரிடம் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, வில்லியனுார் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது, அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் ‘டோல்’ என்ற ஐரோப்பிய ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் வேலை வாய்ப்பு அதிகாரி என அறிமுகபடுத்திக் கொண்டார்.அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பழங்கள், காய்கறி ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், இந்தியாவில் கிளைகளை துவங்க உள்ளது.

இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, கூறி வாட்ஸ் ஆப் மூலம் டெலிகிராம் லிங்க் அனுப்பி உள்ளார்.

டெலிகிராமில் இதற்கென தனி குரூப் உருவாக்கி, அனைவரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர். பிரியதர்ஷினி தனது நண்பர்கள் 4 பேரை அந்த குழுவில் சேர்த்துள்ளார். புதிய நபர்களை அறிமுகப்படுத்தியதிற்காக பிரியதர்ஷினிக்கு சிறிய தொகை அனுப்பட்டுள்ளது. அதன் பின்பு ஒவ்வொரு புதிய நபரும் இணையும்போது பிரியதர்ஷினிக்கு 110 ரூபாய் அறிமுக போனஸ் தொகையாக வழங்கி உள்ளனர். .

இந்த தகவலை கேள்விப்பட்டு முதலியார்பேட்டை, நயினார்மண்டபம், நோணாங்குப்பம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த பலர் 550 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்தினர். ஒரே நாளில் லாபத்துடன் பணம் திரும்பி கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் கூட இதில் முதலீடு செய்தனர்.

அந்த குழுவில் 326 பேர் உறுப்பினராக சேர்ந்து 2.5 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர். ஒரே நாளில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய மர்ம நபர் தொடர்பை துண்டித்து கொண்டார். ஏமாற்றப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். டோல் என்ற நிறுவனத்தின் பெயரில் சைபர் கிரைம் ஆசாமிகள் இந்தியா முழுதும் இதுபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து இணைய வழி தொடர்புகள் அமெரிக்காவில் இருந்து செயல்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

இது குறித்து சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., பிரிஜேந்திரகுமார் யாதவ் கூறுகையில், ‘ஆன்லைனில் வரும் எந்த ஒரு முதலீட்டு அழைப்புகளையும் பொதுமக்கள் ஏற்க கூடாது.

இதுபோன்ற (எம்.எல்.எம்.) நடவடிக்கை தங்கள் பகுதியில் நடப்பது தெரிந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு 1930 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.