"சாத்தானின் பிள்ளைகள்".. பூதாகரமாகும் சீமானின் பேச்சு.. சீறிப்பாய்ந்த செல்வப்பெருந்தகை!

சென்னை: முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (31.07.2023) போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் எனப் பேசி இருக்கிறார். மேலும், நாட்டில் நிலவும் அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். சீமானின் இந்தப் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தது. அவரது பேச்சு மிகவும் அருவருப்பானது; அதை விட ஆபத்தானது.

மணிப்பூரில் ஒடுக்குமுறைக்கும், வன்முறைக்கும் ஆளான பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜகஅரசு செயல்படுகிறது. எப்போதெல்லாம் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான அலை வீசுகிறதோ, அப்போதெல்லாம் அதை மடைமாற்றம் செய்வது போலவே சீமானின் பேச்சுகள் உள்ளன. இதே சீமான் தான், தேர்தலின் சமயத்தில் ‘வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுங்கள்’ என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

“வெறுப்பு முடிவுக்கு வருவது வெறுப்பால் இல்லை; அன்பால் மட்டுமே. இதுவே நிலையான விதி” என 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி சென்றுவிட்டார். மதவெறி சக்திகளும், வெறுப்பு அரசியல் கும்பலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க சதி செய்கிறார்கள். அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கும் வலிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வெறுப்பு அரசியல் பேசியதால் யாருமே வெற்றியடைந்ததில்லை. அதற்கு சிறந்த உதாரணமாக தற்போது கர்நாடகா மாநிலம் உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக மட்டுமல்ல; யார் வெறுப்பு அரசியல் செய்தாலும் இந்த மண்ணில் எடுபடாது. இனி வரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் தங்கள் பேச்சில் கண்ணியம் காக்க வேண்டும். யார் மனதையும் புண்படும்படி பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.