AI சூழ் உலகு 1: அஃறிணையின் நுண்ணறிவுத் திறன் – ஓர் அறிமுகம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). மனிதனுக்கு இருக்கும் நுண்ணறிவுத் திறனை இயந்திரங்களுக்கு கொண்டு வரும் ஸ்மார்ட் முயற்சியாக 20-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஏஐ சார்ந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. படிப்படியான பரிணாம வளர்ச்சியை எட்டி இன்று மனிதர்களுக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது ஏஐ.

கணினியின் தந்தை என போற்றப்படும் சார்லஸ் பாபேஜ், உலகின் முதல் கணினி நிரலாளர் ஏடா லவ்லேஸ் (Ada Lovelace) போன்ற அறிஞர்கள் கூட இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவுத் திறனை பிற்காலத்தில் பெறும் என எண்ணியிருக்க மாட்டார்கள். ஏஐ சார்ந்த ஆராய்ச்சிகள் தொடங்கி 100 ஆண்டுகள் கூட முழுமையாக எட்டாத நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. ஏஐ சார்ந்த ஆராய்ச்சியின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக அறியப்படுகிறார் மார்வின் மின்ஸ்கி.

தமிழில் அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்து புதினம் எழுதி வந்த எழுத்தாளர் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’-வில் வரும் ஜீனோ ரோபோவுக்குத் தெரிந்தது கூட நமக்குத் தெரியாது என சொல்லி இருப்பார். அதில் முகத்தை பார்த்து மனதில் நினைப்பதை யூகத்தின் அடிப்படையில் சொன்னதாக ஜீனோ ஒரு இடத்தில் சொல்லும். தமிழில் ஏஐ குறித்த அறிமுகம் அந்த வழியில் தான் அரங்கேறி உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

தொழில்நுட்ப உலகில் சர்வமும் ஏஐ மயம்: தொழில்நுட்ப உலகில் சர்வமும் ஏஐ மயமாக மாறி சில ஆண்டுகளாகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சுகள் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறைக்கு உறுதுணைபுரிய, போர் புரிய, இசை அமைக்க, புத்தகம் எழுத, பயோ-டேட்டாவை சரிபார்க்க என பல்வேறு பணிகளுக்கு ஏஐ உதவி வருகிறது. டூத் பிரஷ்ஷில் கூட ஏஐ இடம் பெற்றிருப்பதாக சொல்லி பிராண்ட் செய்தது ஒரு நிறுவனம். இதெல்லாம் மெஷின் லேர்னிங்கால் மட்டுமே சாத்தியம் ஆகின்றன.

ஏஐ சார்ந்த ஆராய்ச்சிகள் 1956-ல் தொடங்கியது. உயிரினங்கள் கொண்டிருக்கும் நுண்ணறிவு திறனை அஃறிணையான இயந்திரங்களுக்கு கொடுக்கும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சி அது. பல்வேறு ஃபீல்ட்களை உள்ளடக்கி இந்த ஆராய்ச்சி அமைந்தது. இன்று ஃபேஷியல் ரெகக்னேஷன் தொடங்கி பயனர்களை டார்கெட் செய்து தேடுபொறிகளில் வரும் விளம்பரங்கள், பரிந்துரைகள், வெர்ச்சுவல் அஸிஸ்டன்ட்ஸ், தானியங்கு வாகனங்கள் என அனைத்தும் ஏஐ நுட்பத்தால் சாத்தியமாகி உள்ளது. அதே போல குறிப்பிட்ட சில துறைகளில் தனித்துவ பயன்பாட்டுக்காகவும் ஏஐ பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மனிதர்களுடன் மல்லுக்கட்டும் கேம் பிளேயிங்கிலும் ஏஐ மாஸ் காட்டி வருகிறது.

ஜெனரேட்டிவ் ஏஐ: இந்தச் சூழலில் கடந்த ஆண்டு ஜெனரேட்டிவ் ஏஐ குறித்து உலகளவில் பரவலாக டாக் எழுந்தது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்பாட் என அறியப்படும் சாட் ஜிபிடி அதற்கான விதையை போட்டது. தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ சார்ந்து கவனம் செலுத்தி தங்களது சாட்பாட்களை அறிமுகம் செய்தன. கூகுளும் தன் பங்குக்கு இந்த கோதயவில் குதித்தது. கதை, கவிதை, கட்டுரை, கம்ப்யூட்டர் புரோகிராம் கோடிங், இன்னும் பல.. என அனைத்தையும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்கள் வழங்கும்.

அதேபோல எழுத்து வடிவிலான டிஜிட்டல் சாதன பயனர்களின் கற்பனையை படங்களாக மாற்றும் வல்லமையையும் ஜெனரேட்டிவ் ஏஐ பாட்கள் கொண்டுள்ளன. மிட்ஜெர்னி, டால்-இ போன்றவை அதற்கு உதாரணம்.

ஏஐ: வரமா? சாபமா? – மனிதர்களுக்கு சவால் கொடுக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட இந்த பாட்கள் வரமாகவும், சாபமாகவும் பார்க்கப்படுகிறது. நாட்கணக்கில் மேற்கொள்ளும் வேலைகளை கன நேரத்தில் செய்துவிடுகிறது. அதே நேரத்தில் மனிதர்களுக்கு மாற்றாக சில துறை சார்ந்த பணிகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.

குறிப்பாக, படைப்பு சார்ந்து இயங்கி வருபவர்களுக்கு வில்லனாக விஸ்வரூபம் எடுக்கும் வல்லமை ஏஐ-க்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் ஹாலிவுட் சினிமாவில் ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா என்ற அமைப்பு ஏஐ தொடர்பான அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி போராட்டத்தில் இறங்கினர். மறுபக்கம் எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போல மருத்துவ துறை சார்ந்த நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் வரும் நாட்களில் பெரிய அளவில் சிகிச்சை மேற்கொள்ளலாம். இப்போதைக்கு இந்திய மருத்துவ துறையில் ஏஐ பங்கு தொடக்க நிலையில் உள்ளது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஏஐ-யின் சுவாரஸ்யமிக்க பயணத்தை விரிவாக அலசுவோம்.

| தொடர்வோம்… |

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.