“யோகியை சந்தித்தது பிரச்சினை இல்லை; ஆனால், காலில் விழுந்தது…” – ரஜினி குறித்து திருமாவளவன் பேச்சு

நெல்லை: “யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது பிரச்சினை இல்லை. ஆனால், அவரது காலில் விழுந்து ரஜினி வணங்கியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்?” என ரஜினிகாந்தின் செயல் குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்.

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சிறுபான்மையினர்களுக்கு எதிரான யோகி ஆதித்யநாத் காலில் விழுகிறார் ரஜினி. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருந்தால், யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனது போல் ஆகியிருக்கும் தமிழ்நாடு.

எவ்வளவு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு பெரிய உயர்ந்த மதிப்பை அவர் மீது வைத்திருக்கிறோம். தலைவர்களை சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினையல்ல. ஆனால், காலில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள்? நீங்கள் அவரை உயர்வாக மதிக்கிறீர்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், உங்களைப் பற்றி தமிழ்நாடு மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்தார்கள். எப்படிப்பட்ட உறவு உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஒரு நிகழ்வில் காட்டிவிட்டீர்கள். இப்படிப்பட்டவர்கள் கருத்துருவாக்கம் செய்யும் இடத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்” என்றார்.

மேலும், “தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். சின்னதுரை குடும்பத்துக்கு இழப்பீட்டு வழங்கவதுடன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.