செம பவுலிங் லைன்அப்பில் பாகிஸ்தான்..! இந்திய அணிக்கு எச்சரிக்கை

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை தொடரில் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி நீண்ட நாட்களுக்குப் பிறகு மோத இருக்கின்றன. பழைய பன்னீர்செல்வமாக இப்போது பாகிஸ்தான் அணி பவுலிங்கில் செம கெத்தாக இருக்கிறது. இதற்கு முன்பு இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் போன்ற ஜாம்பவான்கள் அந்த அணியில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், அதேபோன்றதொரு பவுலிங் லைன் அப் இப்போது மீண்டும் பாகிஸ்தான் அணி வைத்திருக்கிறது. அந்த அணியின் இந்த லைன் அப்பை பார்த்தாலே எதிரணிகளுக்கு கதிகலங்கும் வகையில் அந்த பவுலிங் இருக்கிறது. 
 
ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் இப்போது செம பார்மில் இருப்பதுடன், எதிரணிகளை அதிவேகத்தால் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆசிய கோப்பை 2023 தொடர் விரைவில் தொடங்க இருப்பதால் அவர்களின் இத்தகைய அபார பார்ம் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு கொஞ்சம் வயிற்றை கலங்க வைத்திருக்கிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகிய மூவரும் கூட்டாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களுக்கு ஆல்அவட்டானது. 

உண்மையில், 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 29 போட்டிகளில் 27 சராசரியாக வைத்து 163 விக்கெட்டுகளைக் வீழ்த்தியிருக்கிறார்கள். பங்களாதேஷ் இந்த பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் 45 போட்டிகளில் 28.33 சராசரியுடன் 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதற்கிடையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 30.44 சராசரியில் 258 விக்கெட்டுகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு வருடமாக காயமடையாமல் விளையாடி இருந்திருந்தால் இந்தியாவின் சராசரி சிறப்பாக இருந்திருக்கும்.

அதேநேரத்தில் இந்திய அணியின் பேட்டிங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஏற்கனவே அப்ரிடி, ரவுஃப் மற்றும் ஷா ஆகியோருக்கு எதிராக விளையாடிய அனுபவம் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 42.94 சராசரி வைத்துள்ளார். அதேசமயம் கோஹ்லி 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்தில் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களால் மற்ற முடியவில்லை. 

இந்திய பேட்டிங் வரிசையின் முக்கிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் அவர்கள் கட்டாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதுவரை இல்லாத பார்மில் ஷாகீன் அப்ரிடி இருக்கிறார். அவருக்கு சரிநிகராக ரவூப் மற்றும் ஷா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை இந்திய அணி கருத்தில் கொண்டு தயாரானால் மட்டுமே ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியும். 

ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?

2023 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இது ஒரு பிளாக்பஸ்டர் மேட்ச்-அப் ஆகும்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை போட்டித்தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட்டர்களின் பட்டியல்
 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.