“பாலச்சந்தர் கோவில்பட்டி வந்த நேரம்; நான் சென்னை வந்தேன்!" – அனுபவம் பகிரும் நடிகர் சார்லி

சார்லி – வெறுமனே நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

சினிமாவுக்கு அப்பாலும் எழுத்து, வாசிப்பு, மேடை நாடகங்கள் என்று பன்முகத் தளங்களில் பயணிக்கும் ஆளுமை. சில ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ் சினிமாவில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அவரது நெடிய அனுபவங்கள் குறித்து ஆனந்தவிகடன் யூடியூப் சேனலுக்காக மேற்கொண்ட நேர்காணலின் எழுத்துவடிவம் இது.

நடிகர் சார்லி

பொதுவாகத் தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு நாயகியாக நடித்த நடிகை, அதே ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பதுதான் வழக்கம். ஆனால் நீங்கள் அந்த சரித்திரத்தை உடைத்து ரஜினிக்கும் நண்பராக நடித்திருக்கிறீர்கள்; விஜய்க்கும் நண்பராக நடித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அப்பா கேரக்டர்களிலும் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்தாலும் உங்கள் முகமும் உடலும் பெரிதாக மாறவில்லை. இத்தனை ஆண்டுகால உங்கள் பயணம் மற்றும் இளமையின் ரகசியம் பற்றி சொல்லுங்கள்…

“இளமை என்பது ரகசியத்துக்கான விஷயமில்லை. எப்போதும் தேடல் உள்ளவர்கள் இளமையாகத்தான் இருப்பார்கள். முன்னேற வேண்டும் என்கிற எண்ணத்துடன் விடாமுயற்சி செய்பவர்களும் இளமையாகத்தான் இருப்பார்கள். போராட்ட வாழ்க்கையில் ஈடுபாடுள்ளவர்களும் இளமையாகத்தான் இருப்பார்கள். இயங்கிக்கொண்டிருப்பதுதான் இளமை. 

கோயில்பட்டியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி முடித்த நான் 1980, செப்டம்பர் 1 அன்று பணியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்தேன். மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தில் இசை மற்றும் நாடகப்பிரிவு என்ற ஒன்று இருந்தது. இப்போது ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்ஷன் இருக்கிறதே தவிர இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இசை மற்றும் நாடகப்பிரிவை எடுத்துவிட்டார்கள். அந்த இசை மற்றும் நாடகப்பிரிவில்தான் 1980, செப்டம்பர் 15ல்  இந்திய அரசுக்கலைஞர் என்ற பதவியில் பணிக்குச் சேர்ந்தேன். 

நடிகர் சார்லி

என்னை இந்தப் பிரிவில் நடிகராகத் தேர்ந்தெடுத்தது, இந்திய நாடக உலகின் மிகப்பெரும் ஆளுமை பி.எஸ்.ராமராவ். அப்போது என்னை நேர்காணல் செய்த குழுவில் இருந்த ஒரு பெண்மணி, “இவரைப் பலதுறைகளில் நாம் பயன்படுத்தலாம். நடிகராக, நடனக்கலைஞராக, இசைக்கலைஞராக, தொகுப்பாளராகப் பயன்படுத்தும் அளவுக்கு இவருக்குப் பல திறமைகள் இருக்கின்றன’ என்றார். அவர்தான் நாட்டிய உலகின் பெரும் ஆளுமை பத்மா சுப்பிரமணியம் என்று அப்போது எனக்குத் தெரியாது. இப்படி மாபெரும் ஆளுமைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு மனநிறைவுடன் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.வெவ்வேறு மொழி நாடகங்களில் நடிப்பது, நாட்டிய நாடகங்களில் பங்கேற்பதுதான் எங்கள் முதன்மையான பணி. இந்திய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். உதாரணத்துக்கு ‘கச்சதேவயானி’ நாடகத்தில் தெலுங்கிலும் தமிழிலும் சுக்கராச்சாரியாராக நடித்திருக்கிறேன். 

சென்னைக்கு வந்தபிறகு பல நூலகங்களில் நான் உறுப்பினர். அப்படி ஒரு நூலகத்துக்குச் சென்றபோது அங்கே ஹியூமர் கிளப்பின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக நான் ஒரு ஜோக் எழுதி, அதன்கீழே ‘மனோகர், நடிகர்’ என்று எழுதிக்கொடுத்தேன். ‘ஸாரி, இந்த ஹியூமர் கிளப்பின் உறுப்பினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்’ என்றார்கள். ஆனால் ஹியூமர் கிளப்பைச் சேர்ந்த ஒருவர் தவறுதலாக என் ஜோக்கை எடுத்து படித்துவிட்டு, அதை ரசித்து அந்த மேடையில் எனக்கும் வாய்ப்பு தந்தார். சமயங்களில் தவறுதலாகவும் சில நல்ல வாய்ப்புகள் அமையும் என்பதை நான் உணர்ந்த தருணம் அது. நான் அந்த மேடையில் மைமிங்கும் மோனோ ஆக்டிங்கும் நிகழ்த்தினேன்.

நடிகர் சார்லி

அப்போது அந்த நிகழ்ச்சியைப் பார்த்த கலாகேந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த பி.ஆர். கோவிந்தராஜன் என்பவர் நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்று விசாரித்தார். நானும் ‘சரஸ்வதி கான நிலையம், எண் 6, தோப்புத்தெரு, திருவல்லிக்கேணி’ என்று என் முகவரியைச் சொன்னேன். அது முன்பு அவர் தங்கியிருந்த அறை என்றும் அந்த வீட்டின் உரிமையாளர் ஜெயராமன் தன் நண்பர் என்றும் சொன்னவர், மறுநாள் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்.

அடுத்தநாள் என்னுடைய நடிப்பைப் பார்த்த இயக்குநர் பாலச்சந்தர், “ரொம்ப பிரமாதமா நடிக்கிறீங்க. நாங்க ‘தண்ணீர் தண்ணீர்’ படத்துக்காகக் கோவில்பட்டி வந்தோமே, நீங்க ஏன் என்னை வந்து பார்க்கலை?” என்று கேட்டார். “நீங்க கோவில்பட்டிக்கு வந்த நேரம்தான் நான் சென்னை வந்தேன்” என்றேன் நான். “கண்டிப்பாக உங்களுக்கான பாத்திரம் அமையும்போது பயன்படுத்திக்கொள்கிறேன்” என்றார். ஆனால் அந்த வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்போது அவர் இயக்கிக்கொண்டிருந்த ‘அக்னி சாட்சி’ படத்திலேயே நான் நடிப்பதற்காக அவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் ஹைதராபாத் சென்றிருந்தேன். நான் சென்னை திரும்பியபோது புரொடெக்‌ஷன் மானேஜர் எழுதிக்கொடுத்த துண்டுச்சீட்டை என் வீட்டின் உரிமையாளர் தந்தார். 

நடிகர் சார்லி

நான் உடனே இயக்குநர் பாலச்சந்தரைச் சென்று சந்தித்தேன். “நான் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் ‘அக்னி சாட்சி’ படத்திலேயே உங்களை அறிமுகப்படுத்தலாமா என்றுதான் முதலில் யோசித்தேன். ஆனால் படம் முழுவதும் வரும்படியான இன்னும் பெரிய பாத்திரத்தில் உங்களை அறிமுகப்படுத்தலாம் என்று அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன்” என்றார். பிறகு அவர்தான் என்னைப் ‘பொய்க்கால் குதிரைகள்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். 1981லேயே படவேலைகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் இயக்குநர் வீட்டில் நடந்த சுபகாரியங்கள் காரணமாக, 1982ல்தான் திரைப்படம் வெளியானது. 

இதற்கிடையில், இயக்குநர் கே.ராஜேஷ்வர் ஆர்.வி.க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் நான், ரகுவரன், ஜெமினிகணேசனின் மகளான ஜீஜி மூவரையும் வைத்து ‘வீதியெல்லாம் பூப்பந்தல்’ என்ற படத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முயற்சி பாதியிலேயே நின்றுவிட்டது. பிறகு ரகுவரன் ஹரிஹரன் இயக்கத்தில் ‘ஏழாவது மனிதன்’ படத்தில் அறிமுகமானார். ஶ்ரீதர் இயக்கத்தில்  ஜீஜி ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் அறிமுகமானார். நான் ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்தில் அறிமுகமானேன். ராஜேஸ்வர் படத்தில் நடிக்கும்போது ‘மனோகர்’ என்றுதான் என்னை அறிமுகப்படுத்துவதாகத் திட்டம். ஆனால் பாலச்சந்தர் சார்தான் என்னை ‘சார்லி’ ஆக்கி பொய்க்கால் குதிரைகளில் அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் என் திரையுலக வாழ்க்கை தொடங்கியது. நாற்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறேன்”.

நடிகர் சார்லி

சார்லி ஆன கதையைச் சொன்னீர்கள். கோவில்பட்டி மனோகரைப் பற்றிச் சொல்லுங்கள்…

“நான் பிறந்தது விருதுநகரில் உள்ள கசாப்புக்கடைக்காரர் தெருவில். விருதுநகரில்தான் என் அம்மாவின் தந்தை ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்தார். விருதுநகரில் பிறந்தாலும் நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் அப்பாவின் ஊரான கோவில்பட்டியில்தான். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர்கள். கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்தேன். என் பள்ளிச்சூழல்தான் என்னை நடிகனாக்கியது என்று சொல்லலாம். நாடார் நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்காக ‘பாலர் சபை’ என்ற அமைப்பு இயங்கிவந்தது.

ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமையும் எல்லா மாணவர்களும் மேடையேறி ஏதாவது திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஒரு பையனுக்கு எதுவுமே தெரியவில்லை, வீட்டை நினைத்து அழுகிறான் என்றால், ‘மேடையில் வந்து அழுதுவிட்டாவது போ’ என்று கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். அப்படித்தான் எனக்கு மேடைக்கூச்சம் போனது. ‘தேவே உன்னைப் போற்றிடுவேன்; தினமும் என்னைக் காத்திடுவாய்; நாவால் உன்னை நான் பாட நல்ல தமிழைத் தந்திடுவாய்’ என்று பிரார்த்தனைப்பாடலையாவது பாடித்தான் இறங்குவார்கள். இப்படி பள்ளியில் இருந்தே எனக்குத் திறமையை எந்தக்கூச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைந்தது”.

நடிகர் சார்லி

பொதுவாக  இயக்குநர், தயாரிப்பாளர் என்று நடிகர்கள் சினிமாவிலேயே வெவ்வேறு இடத்துக்குச் செல்வது வழக்கம். ஆனால் நீங்கள் சினிமாவைத் தாண்டி எழுத்து, வாசிப்பு ஆகியவற்றின்மீதும் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். ‘தமிழ் சினிமாவில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டிருக்கிறீர்கள். எழுத்தாளர்களுடனான நட்பு உங்களுக்கு எதைக் கற்றுக்கொடுத்தது?

“கவிஞர் ஆத்மாநாம் என் அறைத்தோழர். அவரது இயற்பெயர் மதுசூதனன். பி.எஃப் அலுவலகத்தில் பணிபுரிந்த கவிஞர் ஆனந்த் என் நண்பர். அவர்தான் ஆத்மாநாம், ஸ்டெல்லாபுரூஸ், ஞானக்கூத்தன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். நான் தங்கிய அறையில் இருந்து ‘ழ’ சிற்றிதழில் முகவரி எழுதி தபால் மூலம் அனுப்பிவைத்திருக்கிறார்கள். எதைக்கண்டும் பிரமிப்பு அடையாமல் இருத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் நமக்கு நாமே பெருமைப்பட்டுக்கொள்ளாமல் இருப்பது போன்றவறுக்கு எல்லாம் எழுத்தாளர்களின் நட்புதான் காரணமாக இருந்தது”

– தொடரும்…..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.