ஒரே நாடு ஒரே தேர்தல்: வரவேற்கும் எடப்பாடி பழனிசாமி – கூட்டணிக் கணக்கு காரணமா?

நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. பாஜக ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று வேகப்படுத்தி வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் பணி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் இருக்கும் ஆட்சி முடிவுக்கு வரும் போதெல்லாம் அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? 1996, 1998, 1999 என அடுத்தடுத்து மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அதுபோன்ற சூழல் அமைந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் மீண்டும் நடத்தப்படுமா?

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அப்போது மற்ற மாநிலங்களுக்கும் தேர்தல் வருமா? சில மாதங்களுக்கு முன்னர் தான் சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தன. ஐந்து மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளது. அவர்களது ஆட்சிக்காலம் என்னவாகும்? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக இந்த தேர்தல் முறையை ஆதரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இதை வரவேற்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘மோடி மேஜிக்’ – 2024 தேர்தல் எப்படி இருக்கும்.?

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நேரமும், பெரும் செலவும் மிச்சப்படுத்தப்படும். கொள்கைகளை திறம்பட செயல்படுத்த இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்று கூறுகிறார்.

ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.