யாரு அண்ணாமலையா.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க.. அசால்ட்டாக சொன்ன உதயநிதி

சென்னை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலட்சியமாக கூறியது பாஜகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலையை புறக்கணிப்பது இது முதன்முறை அல்ல.. பல முறை இப்படி செய்திருக்கிறார்.

சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியிருந்தார். இதுதான் தற்போது பிரச்சினை ஆகியுள்ளது. அதாவது, “இந்து மதத்தின் மற்றொரு பெயர் தான் சனாதனம். அப்படியென்றால் இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறுகிறார்” என்று பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள இந்து அமைப்புகளும், பாஜக நிர்வாகிகளும் உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் உதயநிதியின் பேச்சு இந்து மதத்தினரின் மனதை புண்படுத்துவதாக கூறி அவர் மீது டெல்லி போலீஸில் புகாரும் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய உதயநிதி, “சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதுதான். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” எனக் கூறினார். மேலும், சனாதனம் பற்றி நான் பேசியதற்கு அதிமுகவினரின் கருத்துகளை கேளுங்கள் என்றும் உதயநிதி கூறினார்.

அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, “நீங்கள் சனாதனம் பற்றி பேசியதை ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து தாக்குவதாக அண்ணாமலை கூறியிருக்கிறாரே” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு உதயநிதி, “யாரு.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க..” என்றார். பின்னர், ” எனக்கு எல்லா மதமும் ஒன்றுதான்.. ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாத ஆளு நான்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் உதயநிதி.

அண்ணாமலை பற்றிய கேள்விகளை உதயநிதி ஸ்டாலின் புறக்கணிப்பது இது முதன்முறை அல்ல. அண்மையில் ஒரு யூடியூப் சேனல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் அடுத்தடுத்து வந்தன. மோடி, ஜெயலலிதா, ஹெச். ராஜா என மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் புகைப்படங்களும் வந்தன. அவர்களை பற்றி எல்லாம் உதயநிதி கருத்து தெரிவித்து வந்தார். அப்போது அண்ணாமலை புகைப்படம் வந்தது. அதற்கு, “இவரு யார்னு தெரியல. ஏதோ இப்போ பிரஸ் மீட் வெச்சிட்டு வர்றாருனு கேள்விப்பட்டேன்” எனக் கூறினார்.

அதேபோல, சில தினங்களுக்கு முன்பு “உதயநிதி ஸ்டாலினால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பாஸ் ஆக முடியுமா” என அண்ணாமலை கேள்வியெழுப்பினார். இதுதொடர்பாக உதயநிதியிடம் நிருபர்கள் கேள்வி கேட்ட போது சட்டென உதயநிதி அங்கிருந்து கிளம்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.