திமுக அமைச்சர்களின் பழைய வழக்குகள்- தூர் வாறும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: என்ன காரணம்?

கீழமை நீதிமன்றங்களில் முடித்துவைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் எடுத்து மறு விசாரணைக்கு உட்படுத்தி வருகிறார்.

திமுக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த மூன்று அமைச்சர்கள் மீதான வழக்கையும் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன்.

திமுக தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதே நீதிபதி எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை மீண்டும் எடுத்து விசாரிப்பதற்கு மறுத்துவிட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். ஓபிஎஸ் மீதான வழக்கு 2011ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டதையும் எதிர்த்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது.

விருதுநகரில் கடன் மேளா நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்

நேற்றைய தினம் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் வழக்கை சிறப்பு நீதிமன்றம் முடித்துவைத்ததற்கு எதிராகவும் ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்துள்ளார். திமுகவை குறிவைத்தே வழக்குகள் விசாரிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் வழக்கு ஒன்றும் மறு ஆய்வுக்கு எடுத்துள்ளார் ஆனந்த் வெங்கடேஷ். 12ஆம் தேதி இருவர் தொடர்பான வழக்குகள் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மீது விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், அவர் இதற்கும் பதில் அளித்துள்ளார். “வழக்குகளை மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் செல்லும்போது இன்னும் அதிகமான வழக்குகள் வெளியே வருகின்றன.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை எதிர்கொண்டு சுத்தமாக வாருங்கள். கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.