14 நாளாக தொடரும் போர்: காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை

காசா,

Live Updates

  • ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை வெற்றி பெற விட மாட்டோம்: ஜோ பைடன்
    20 Oct 2023 1:44 AM GMT

    ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை வெற்றி பெற விட மாட்டோம்: ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் குறித்தும் பேசினார். ஜோ பைடன் கூறுகையில்,  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல இஸ்ரேல் மீதான தாக்குதலையும் ஏற்க முடியாது.

    ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகள் வெற்றி அடைய விட மாட்டோம். ரஷ்ய அதிபர் புதின் போன்ற கொடுங்கோலர்கள் வெல்லவும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இருவருமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள். இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு இந்த ஆண்டில் இருந்து அதிகரிக்கப்படும். என்று கூறினார். 

    • Whatsapp Share

  • 19 Oct 2023 10:51 PM GMT

    இஸ்ரேல் தாக்குதலில் காசா தேவாலய வளாகத்தில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தகவல்

    காசா சிட்டி,

    காசா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பல இடம்பெயர்ந்த மக்கள், இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் வளாகத்தில் “பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்” ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியது.

    பாலஸ்தீன பகுதியில் போர் மூண்டதால், பல காசா வாசிகள் தஞ்சம் புகுந்திருந்த வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் உள்ள இலக்கை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    • Whatsapp Share

  • 19 Oct 2023 10:10 PM GMT

    கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வடகொரியாவின் ஆயுதங்கள்: தென்கொரியா புகார்

    காசாவின் அல்-அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டு 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அரசு செய்த ஆய்வின்படி காசா ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது. கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயல்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் இதனை உறுதி செய்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் இஸ்ரேல் மீது கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை வடகெரியா மறுத்துள்ளது.

    • Whatsapp Share

  • 19 Oct 2023 9:35 PM GMT

    இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 7 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல்

    ரபா நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவரான ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன சட்ட சபை உறுப்பினரான ஜமிலா, ஹமாசின் முக்கியத் தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ரான்டிசியின் மனைவியும் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 7 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் சடலங்களை கொண்டு அங்கிருந்த டாக்டர்களே கண்ணீர் சிந்தியதாக பாலஸ்தீன ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • Whatsapp Share

  • 19 Oct 2023 9:21 PM GMT

    சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் காசா மக்கள்

    இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிருக்கு பயந்து சுமார் 10 லட்சம் பேர், அதாவது காசாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளை போல் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களும் போதுமான அளவு உணவு, குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

    இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசாவின் அல்-அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்டு, பெண்கள் சிறுவர்கள் உள்பட 500 பேர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    சர்வதேச சட்டவிதிமுறைகளை மீறி ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும், பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக ஆஸ்பத்திரியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

    தொடரும் குண்டு மழை

    இந்த நிலையில் காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலை தொடர்ந்து, போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென உலக நாடுகளும், ஐ.நா.வும் வலியுறுத்தின. ஆனால் அதற்கு செவிசாய்க்காத இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் நேற்றும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு காசாவிலும் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ரபா, கான் யூனிஸ் நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டதில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    • Whatsapp Share

  • 19 Oct 2023 8:48 PM GMT

    காசாவில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு

    காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகின்றன. இதில் காசா நகரம் சிதைந்து வருகிறது. குண்டு வீச்சில் தரைமட்டாகி கிடக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை காசா மக்கள் இரவு, பகலாக தேடி வருகின்றனர்.

    ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படுவதால் காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன.

    அதே சமயம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் ஆஸ்பத்திரிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு புறம் இருக்க உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காசா மக்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, அசுத்தமான தண்ணீரை குடித்து உயிர் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    • Whatsapp Share

  • 19 Oct 2023 8:37 PM GMT

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14-வது நாளாக தொடரும் போர்

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5 ஆயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். அதோடு தரை, கடல் மற்றும் வான் வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோரை சுட்டுக் கொன்றதுடன், 200-க்கும் அதிகமானோரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

    அதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது. அப்போது முதல் இருதரப்புக்கும் இடையில் தீவிரமாக போர் நடந்து வருகிறது. இந்த போர் இன்று 14-வது நாளை எட்டியது.

    • Whatsapp Share


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.