ரத்த வெறி பிடித்த ஹமாஸ் படையினர் அமைப்பின் தலைவர் மகன் பகிரங்க பேட்டி| The son of the leader of the bloodthirsty Hamas militant organization gave a public interview

வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பை நிறுவிய தலைவர்களில் ஒருவரது மகன், அவர்களின் பயங்கரவாத நடவடிக்கை பிடிக்காமல் குடும்பத்தை பிரிந்து அமெரிக்கா சென்று, கிறிஸ்துவராக மதம் மாறிய நிகழ்வுகளை முதல்முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

படுகொலை

மேற்காசியாவில் உள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் மொசாப் ஹசன் யூசப்.

ஹமாஸ் பயங்கரவாத குழுவை நிறுவிய முக்கிய தலைவர்களில் ஒருவரது மகனான இவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள செய்தி சேனலுக்கு, இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு தலைமை வகித்த குடும்பத்தில் பிறந்தேன். அந்த உலகத்தின் இளவரசராக வளர்க்கப்பட்டேன்.

அவர்களைப் பற்றி முழுவதுமாக எனக்கு தெரியும். கடந்த, 1996ல் பாலஸ்தீனத்தின் மெகிடோ சிறையில் நுாற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்தனர். அதை நேரடியாக பார்த்து உள்ளேன்.

அவர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது உண்மையான அக்கறை என்றைக்கும் இருந்ததில்லை.

இந்த சம்பவத்துக்கு பின் ஹமாஸ் மீது எனக்கு வெறுப்பு உண்டானது. என் சொந்த ரத்தமாக இருந்தாலும் அவர்களை விட்டு பிரிய முடிவெடுத்தேன். அதற்கு காரணம் அவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட வெறுப்பு தான்.

பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தேன்.

கிறிஸ்துவ மதத்துக்கு மாறி, இன்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்றைக்கு காசாவின் ஆட்சியாளர்களாக உருவெடுத்துள்ளனர். இன்றைக்கும் அவர்களது ரத்த வெறி அடங்கவில்லை.

மத அமைப்பு

ஹமாஸ் என்பது தேசியத்துக்கான இயக்கம் அல்ல. மத்திய கிழக்கிலும், உலகம் முழுதும் இஸ்லாமிய ஆளுகையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்கான மத அமைப்பு அது.

தங்கள் நோக்கத்தை அடைவதற்காக பாலஸ்தீனர்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த அமைப்பின் பின்னணியில் இருப்பது ஈரான் அரசு. அவர்கள் தான், ஹமாஸ் அமைப்பின் முதலாளி. அவர்கள் சொல்லுக்கு ஏற்ப, ஹமாஸ் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.