குழந்தையை கொன்ற வழக்கில் பெண்ணை விடுவித்தது நீதிமன்றம்| The court acquitted the woman in the case of killing the child

புதுடில்லி, தவறான உறவில் பிறந்த குழந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், சத்தீஸ்கரை சேர்ந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு, தவறான உறவில் பிறந்த குழந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உயர் நீதிமன்றம், 2010ல் உறுதி செய்தது.

தண்டனை

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் அபய் ஓகா, சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த பெண், கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

அந்த கிராமத்தை சேர்ந்த மற்றொருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள கால்வாயில், பிறந்து சில நாட்களேயான ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அது இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை என்றும், தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை அந்த பெண் கொன்றதாகவும் கூறி தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தனியாக இருப்பதால், ஒரு பெண்ணின் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவது, தனிமனித உரிமையை மீறுவதாகும்.

கால்வாயில் கிடைத்த குழந்தை, பிறப்பதற்கு முன் இறந்ததா, பிறந்த பின் இறந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும், அந்த குழந்தை, இந்த பெண்ணுக்கு பிறந்ததுதானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

நிரூபிக்கப்படவில்லை

சட்டத்துக்கு உட்பட்டு கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை உள்ளது. அவ்வாறு இந்த பெண் கருக்கலைப்பு செய்துள்ளாரா அல்லது பெற்றுக் கொண்டாரா என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

இந்த வழக்கில், இந்த பெண்தான், தவறான உறவில் பிறந்த குழந்தையை கொன்றுள்ளார் என்பதை ஏற்கனவே முடிவு செய்து, முறையாக விசாரிக்காமல், எந்த சாட்சியும், ஆதாரமும் இல்லாமல், தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்தான் குற்றம் செய்தார் என்பதும், அந்த குழந்தை இவருடையது என்பதும் நிரூபிக்கப்படவில்லை. அதனால், ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.