“விரைவில் சுற்றுப்பயணம் தொடங்குவேன்” – மதுரையில் சசிகலா தகவல்

மதுரை: “தேர்தலும் வருகிறது. விரைவில் சுற்றுப்பயணம் தொடங்குவேன்” என்று சசிகலா கூறினார். பசும்பொன் முத்துராமலிங்கத் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இரண்டு ஆண்டுகளாக பசும்பொனுக்கு வராத இபிஎஸ் தற்போது தேர்தல் நெருங்குவதால் வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது என்றாலும், விருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை.

தேர்தல் சமயத்தில்தான் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமாடுகிறதா என்று கேட்டால், எனக்கு அப்படித் தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அந்த சமயத்தில் ஒருவர் வாயில் அருகில் வரும் அளவுக்கு காவலர்கள் என்ன செய்தார்கள். ஒருவேளை அவரை முன்கூட்டியே பிடித்திருந்தாலும் மறைக்காமல் தெரிவித்து இருக்கலாம்.

யார் பிரதமராவது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நீங்களும் நானும் தனிமனிதராக எதுவும் சொல்ல முடியாது. இபிஎஸ் பிரதமராவது என்பது அவர்களின் ஆசை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் உள்ளது. எங்கள் கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல தான் அவர் (ஓபிஎஸ்) விருந்தாளி இல்லை. இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. அது மீனவர்களுக்கு நல்ல விஷயமா. மீனவர்கள் எப்படிப் போனால் என்ன என்கிற நினைப்பில்தான் அன்றைக்கே அவர்கள் செய்திருக்கவேண்டும். அவர்களிடம் இன்று மீனவர்களுக்கு உதவியை எதிர்பார்ப்பது தவறு என நினைக்கிறேன்.

‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை நாங்கள் நிறைவேற்றவில்லை; திமுக வகுத்த திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறோம்’ என உதயநிதி கூறுகிறார். இது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கல் ஆகிவிட்டன. என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் சொன்னதை எதுவும் உருப்படியாக செய்யவில்லை” என்றார்.

தேர்தலுக்கு முன்பு அனைவரையும் ஒன்றிணைப்பீர்களா, இபிஎஸ் இடம் இருப்பதுதான் அதிமுக என தேர்தல் ஆணையமும் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சிவில் வழக்கு தீர்ப்பு இன்னும் வரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தால்தான் இறுதி முடிவு என தேர்தல் ஆணையும் சொல்லியுள்ளது. தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் அந்தக் கடிதத்தை தான் கொடுத்திருக்கிறது. தொண்டர்களை தொடர்ந்து சந்திக்கிறேன். தேர்தலும் வருகிறது. விரைவில் சுற்றுப்பயணம் தொடங்குவேன்” என்றார் சசிகலா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.