INDvsENG: `ஆட்டநாயகன் ரோஹித்தான்; ஆனால், வெல்ல வைத்தது பௌலர்கள்தான்!' – முதலிடத்தில் இந்தியா!

இங்கிலாந்து வீரர்கள் திகைத்து நிற்கிறார்கள். பந்துகள் அவர்களின் கண் முன்னால் அவர்களின் ஆயுதமான பேட்டைக் கடந்துதான் செல்கின்றன. ஆனால், எதுவுமே அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இல்லை.

காற்றை கிழ்த்துக் கொண்டு சென்ற பந்துகள் ஸ்டம்புகளை சிதறடிக்க செய்வதறியாது பித்து பிடித்ததை போல நிற்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள். அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு சென்றது இந்திய பௌலர்கள்.

ஷமி

பெரும்பாலும் எல்லா அணிகளுமே இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தை அடித்துத் துவைத்திருக்கின்றன. இது இந்தியாவின் முறை இந்தியாவும் அவர்களை தங்கள் பங்குக்கு அடித்து துவைத்திருக்கிறது. வெறும் 229 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்துவிட்டு இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெருமித நடைபோட்டிருக்கிறது இந்திய அணி.

‘இந்த மைதானத்தில் காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கக்கூடும். ஆக, இந்தியா பந்துவீசும்போது 20-25 ஓவர்களுக்குப் பிறகு அவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். இங்கிலாந்துக்கு பேட்டிங் கொஞ்சம் சுலபமாக இருக்கும்.’ இந்தியா பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது வர்ணனையில் இப்படித்தான் பேசியிருந்தார் தினேஷ் கார்த்திக். இதை இந்திய பௌலர்கள் கேட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அவ்வளவு தூரம் ஆட்டத்தை எதற்கு இழுத்து செல்ல வேண்டும்? முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே முடித்துவிடுகிறோம் என்ற சொல்லாமல் சொல்லியிருந்தார்கள்.

இந்தியா

அந்த பவர்ப்ளேக்குள்ளாகவே பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார். ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். அங்கேயே ஆட்டம் முடிந்துவிட்டது. அதன்பிறகு நடந்ததெல்லாம் சம்பிரதாயம்தான்.

இந்திய அணி இங்கிலாந்தை இவ்வளவு சீக்கிரம் சுருட்டியதில் பிட்ச்சின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. ரோஹித் பேட்டிங் செய்யும்போது ஒருகட்டத்தில் ஒரு பந்து அவரது இடுப்புக்கு கீழ் வந்திருக்கும். அடுத்த பந்தும் அதேமாதிரி வருமென ரோஹித் எதிர்பார்க்க பந்து கொஞ்சம் மேலெழும்பி வர ரோஹித் கொஞ்சம் தடுமாறி அரைகுறையாக ஷாட் ஆடியிருப்பார்.

இந்த மாதிரியான ‘Uneven’ பவுன்ஸ் இந்த பிட்ச்சில் அதிகமாகவே இருந்தது. ரூட்டை பும்ரா வீழ்த்திய பந்தும், ஸ்டோக்ஸை ஷமி வீழ்த்திய பந்தும் இப்படியானவைதான்.

ரூட், ஸ்டோக்ஸ் இருவருமே கொஞ்சம் கூடுதல் பவுன்ஸை எதிர்பார்க்க பந்து அவர்கள் எதிர்பார்த்ததைவிட கீழிறங்கி வந்து ஏமாற்றியிருக்கும். ஷமி டெய்ல் எண்டர்களிடத்தில் வீழ்த்திய அடில் ரஷீத்தின் விக்கெட் வரைக்குமே இதைப் பார்க்கமுடியும்.

குல்தீப் – ஸ்ரேயஸ்

அதேமாதிரிதான் குல்தீப் யாதவுக்கும் பிட்ச் மூலம் மேஜிக் நிகழ்ந்திருந்தது. லக்னோ கொஞ்சம் அதிகமாகவே ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைக்கக்கூடிய பிட்ச். அதனால்தான் அஷ்வின் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இருக்கக்கூடும் என்ற பேச்செல்லாம்கூட எழுந்தது. மேலும், இன்றைய ஆட்டத்தில் முந்தைய ஆட்டங்களை ஸ்பின்னர்களுக்குப் பந்து அதிகமாகவே திரும்பியிருந்தது. 3 டிகிரிக்கும் அதிகமாக இங்கிலாந்தின் ஸ்பின்னர்கள் பந்தைத் திருப்பியிருந்தனர்.

அடில் ரஷீத்தும் மொயீன் அலியும் நன்றாகவேதான் வீசியிருந்தனர். ரோஹித்தின் விக்கெட்டைக்கூட அடில் ரஷீத்தான் வீழ்த்தியிருந்தார். அவர்களுக்கு பந்து அவ்வளவு திரும்பினால் குல்தீபுக்கு பந்து திரும்பாதா? குல்தீப் ஏற்கெனவே நல்ல ஃபார்மில் வேறு இருக்கிறார்.

பட்லருக்கு பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்து லெக் ஸ்டம்புக்கு திருப்பியிருப்பார். இப்படியொரு திருப்பத்தை பட்லர் எதிர்பார்த்திருக்கவே இல்லை. மலான், ரூட், பேர்ஸ்ட்டோ, ஸ்டோக்ஸ், பட்லர் என இங்கிலாந்தின் நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் இந்திய பந்துவீச்சாளர்கள் எந்த சிரமமுமே இல்லாமல் வீழ்த்தினர். ஷமி 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்தியா

இந்தப் போட்டியில் இந்திய அணி தங்களை தாங்களே சோதித்துக் கொள்வதற்கான களமாக அமைந்தது. முக்கிய பேட்டர்கள் சொதப்பிய போதும் ரோஹித் சர்மா பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பான இன்னிங்ஸை ஆடி கரை சேர்த்திருந்தார். ஆனாலும் இது பௌலர்களுக்கு கிடைத்த வெற்றியே! இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். எனில்,எதிரணியிடம் 60 விக்கெட்டுகள் இருந்திருக்கிறது. அந்த 60 விக்கெட்டுகளில் 56 விக்கெட்டுகளை இந்திய பௌலர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். ஒரு அணியாகவே இந்திய அணி சவாலான சூழலில் சிறப்பாக செயல்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வாழ்த்துகள் இந்தியா.

இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் யார் உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.