Israeli PM apologizes for criticism of spy agency | உளவு அமைப்பு குறித்து விமர்சனம் மன்னிப்பு கேட்டார் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம் : ஹமாஸ் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவு அமைப்பு முன்னெச்சரிக்கை செய்யவில்லை என்று கூறியதற்கு, கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தன் கருத்துக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கேட்டார்.

தாக்குதல்

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது, கடந்த 7ம் தேதி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது.

இரு தரப்புக்கும் இடையேயான மோதலில், பாலஸ்தீனம் தரப்பில் 8,000 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது.

காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருகிறது. எனினும், காசாவில், ஹமாஸ் பயங்கரவாதிகள் சுரங்கப்பாதைகளை கட்டமைத்துள்ளதால், தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயங்கி வருகிறது.

இதற்கிடையே, ‘கடந்த 7ம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம், உளவு அமைப்பு உள்ளிட்டவை முன்னெச்சரிக்கை செய்ய வில்லை’ என, சமூக வலைதளத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார்.

உயிரை பணயம் வைத்து ஹமாஸ் அமைப்புடன் போராடி வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக, பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்து விட்டதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் நெதன்யாகு, சமூக வலைதளத்தில் இருந்து அந்த கருத்தை நீக்கினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:

நான் தவறு செய்து விட்டேன். நான் தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நம் தேசத்திற்காக போராடும் ராணுவம் மற்றும் படை வீரர்களுக்கு எப்போதும் முழு ஆதரவு வழங்குகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அடிப்படை தேவை

இதற்கிடையே, காசாவில் உள்ள ஐ.நா., உதவி கிடங்குக்குள் நேற்று புகுந்த மக்கள், அங்கிருந்து உணவு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றனர்.

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல், அடிப்படை தேவைகளுக்காக, மக்கள் கூட்ட மாக அலைமோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

காசாவின் பல்வேறு பகுதிகளில் முடக்கப்பட்டிருந்த இணைய சேவை நேற்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.