Economic offender should not be allowed to be a pet: Parliamentary Standing Committee recommendation | பொருளாதார குற்றவாளிக்கு கை விலங்கு கூடாது : பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை

புதுடில்லி :’பொருளாதார குற்றங்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது, குற்றவாளிக்கு கை விலங்கிட்டு அழைத்து செல்லக்கூடாது’ என, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சி.ஆர்.பி.சி., எனப்படும், குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஐ.இ.சி., எனப்படும் இந்திய

சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு, ‘பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆதினியம்’ என ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று சட்ட திருத்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து, இந்த மசோதாக்கள், உள்துறை அமைச்சகத்துக்கான பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

பா.ஜ., – எம்.பி., பிரிஜ்லால் தலைமையிலான நிலைக்குழு மசோதாக்களை ஆய்வு செய்து, கடந்த 10ம் தேதி ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சில திருத்தங்களை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதன் விபரம்:
கொலை, பாலியல் பலாத்காரம், பயங்கரவாத நடவடிக்கை போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் போது, அவர்களை கை விலங்கிட்டு அழைத்து செல்ல, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பொருளாதார குற்றமும் இணைக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்களை பயங்கர குற்றங்களுடன் இணைக்கக் கூடாது. எனவே, பொருளாதார குற்றங்களுக்கான கைது நடவடிக்கையின் போது, கை விலங்கிட்டு அழைத்து செல்லும் விதிமுறையை நீக்க வேண்டும்.மேலும், தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, கைது நடவடிக்கையின் போது, குற்றவாளிக்கான போலீஸ் காவல், கைதான முதல், 15 நாட்களில் வழங்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக 15 நாட்கள் வரை வழங்கப்படுகிறது.

புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தில், மொத்தமுள்ள 15 நாள் போலீஸ் காவலை, 40 அல்லது 60 நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, போலீஸ் காவல் எடுப்பதை தவறாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, முதல் 15 நாட்களுக்கு மேல் தேவைப்பட்டால் போலீஸ் காவல் எடுத்துக் கொள்ளலாம் என்ற குறிப்பு இந்த திருத்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.