ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவை: கொடியசைத்து தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு

பாதம்பஹர்: ஒடிசாவில் 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாதம்பஹர் ரயில் நிலையத்தில் இருந்து 3 புதிய ரயில் சேவைகளை குடியரசுத் தலைவர் முர்மு நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி பாதம்பஹரிலிருந்து முர்முவின் பிறந்த இடமான உபர்பேடாவுக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள ராய்ரங்பூருக்கு தொடங்கிவைக்கப்பட்ட ஒரு ரயிலில் குடியரசுத் தலைவர் பயணம் செய்து தனது பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் தனது வாழ்நாளில் கணிசமான நேரத்தை ராய்ரங்பூரில்தான் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமிர்த் ரயில் நிலைய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பாதம்பஹர் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்துக்கான அடிக்கல்லையும் குடியரசுத் தலைவர் நாட்டினார்.

ஒடிசாவின் சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள பாதம்பஹர் ரயில் நிலையம் ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படவுள்ளது.

விழாவில் ரயில்வே அமைச்சர் பேசுகையில், “ நாட்டில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு ரயில் இணைப்புகளை வழங்க வேண்டும் என்பது பிரதமர் மோடி அரசின் முன்னுரிமை. இந்த மூன்று ரயில்களும் கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு விடப்பட்டுள்ளதால் பல்வேறு வகைகளில் பயனளிக்கும்.

ஷாலிமர்-பாதம்பஹர், பாதம்பஹர்-ரூர்கேலா வராந்திர விரைவு ரயில் மற்றும் பாதம்பஹர்- டாடா நகர் ஆகிய மூன்று வழித்தடங்களில் இந்த புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பகுதிகளை பெரிய நகரங்களுடன் இணைக்கும் இந்த திட்டத்தால் உள்ளூர் பொருளாதாரம் மட்டுமின்றி, சுகாதாரம், பழங்குடி சுற்றுலா ஆகியவற்றுக்கும் பெரும் ஊக்கமளிக்கும்’’ என்றார்.

ஷாலிமார்-பாதம்பஹர் வாராந்திர எக்ஸ்பிரஸ் மேற்குவங்கம் கொல்கத்தா வுக்கு அருகிலுள்ள ஷாலிமரையும், ஒடிசாவின் பாதம்பஹரையும் இணைக் கும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.

இரண்டாவது ரயில் கனிம வளங்கள் நிறைந்த பகுதியான பாதம்பஹரை உருக்கு நகரமான ரூர்கேலாவுடன் இணைக்கும். மூன்றாவது ரயில் டாடாநகர்-பாதம்பஹரையும் இணைக்கும். தினசரி பயணிகளுக்கு இந்த ரயில் சேவை மிக முக்கியமானது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

புதிய ரயில் சேவையால் கல்விநிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை எளிதாக சென்றடைய முடியும் என்பதால் இது மாணவர்களுக்கும், வேலை ஆர்வலர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும். மேலும், மருத்துவ வசதி தேவைப்படுவோருக்கும் உயரியமருத்துவ கிச்சை பெற இந்த புதியரயில் சேவை வழிவகுக்கும். அவர்கள்டாடாநகரின் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

வடகிழக்கு பகுதிகளின் அழகிய நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகளை கண்டு ரசிப்பதை புதிய ரயில் சேவை ஊக்குவிக்கும் என ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.