நாங்க அனுப்பல, அவரா போய்ட்டாரு…. ஹர்திக் பாண்டியா குறித்து குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா திடீரென மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது தான் ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பு நடைபெற்றிருக்கும் மெகா டிவிஸ்ட். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியெல்லாம் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியாதபோது, அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே ஒருமுறை சாம்பியன், அடுத்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் என ஜெட் வேகத்தில் புகழின் உச்சத்துக்கு சென்றது  குஜராத் டைட்டன்ஸ். இதற்கு ஆணிவேராக இருந்தவர் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அவரது வழிநடத்தலில் குஜராத் அணி டாப் டீமாக இருக்கும் நிலையில், இந்த முறை அந்த அணியின் ஆணிவேரையே ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்படியொரு டிரான்ஸ்பரை ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆஸ்தான பிளேயராக தான் இருந்தார். கிரிக்கெட்  உலகில் அவரை தத்தெடுத்து வளர்த்து புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்று ஆளாக்கிவிட்டதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியே என்றாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் ஒரு முரண்பாடு ஏற்பட்டது. அதாவது மும்பை அணியின் நிர்வாகத்திடம் நேரடியாக தனக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்க, ரோகித் சர்மா இருக்கும்போது அதெப்படி கொடுப்பது என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மறுப்பு தெரிவிக்க… அப்போது தான் ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தாவினார் ஹர்திக்.

அங்கு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்னவெல்லாம் செய்ய நினைத்தாரோ அதனை இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்து காண்பித்து வெற்றியும் பெற்றார். இதனை பார்த்த மும்பை இந்தியன்ஸ் கொஞ்சம் அவசர பட்டுவிட்டோமோ என எண்ணி, அவரை மீண்டும் எப்படி தூக்குவது என மீனுக்கு கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தது. அந்த நேரத்தில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் பணம் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் தொடர்பான முரண்பாடு எழ, அந்த அணியில் இருந்து கழன்று கொள்ள முடிவெடுத்தார் அவர். உடனே தன்னுடைய விருப்பத்தை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடமும் தெரிவித்தார்.

 November 27, 2023

இப்படியான சந்தர்ப்பத்துக்கு தான் இழவு காத்த கிளி போல காத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தட்டி தூக்கியிருக்கிறது. ரோகித்துக்கு பிறகு சரியான கேப்டன் வேண்டும் என்பதால் மும்பை நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. பாண்டியாவும் தன்னுடைய சொந்த அணிக்கு திரும்பியதை மகிழ்ச்சியாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் டைரக்டர் விக்ரம் சோலன்கி, ” ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை அவரது தலைமையில் ஐபிஎல் சாம்பியனாகவும், இராண்டாம் முறை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றார். இருப்பினும் அவர் தன்னுடைய சொந்த அணியாக நினைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார், நாங்களும் அவருடைய முடிவை மதித்து அனுப்பி வைத்திருக்கிறோம்” என கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.