மலையகத்துக்கான அபிவிருத்தியில் நீயா…நானா… என்ற போட்டி வேண்டாம் – அமைச்சர் ஜீவன் வலியுறுத்தல்

மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் நீயா, நானா என்ற போட்டி வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலையக பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மலையகத்துக்கு கடந்த காலங்களில் சேவையாற்றியுள்ளனர். பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளனர் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. சிறந்த பணிகளை வரவேற்கிறேன். பிறரின் பிள்ளைக்கு பெயர் சூட்ட வேண்டிய தேவை எனக்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் மலையகம் சார்பாக நாம் மாத்திரமே உள்ளோம். எனவே, எமது மக்களின் முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறேன். காணி உரிமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. காணி உரிமை தொடர்பிலான குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொறுத்தமான பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தனி வீட்டுத்திட்டம் ஏதும் காணப்படவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பி. சந்திரசேகரன் ஆகியோர் தனி வீட்டுத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்கள்.

முலையகத்தில் சுமார் 60,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுத்திட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு முதல் கட்டமாக காணி உரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்காக கடந்த கால தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுத்த சிறந்த திட்டங்களை நாம் மறுக்கவில்லை. அத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றோம். ஆனால் எமது திட்டங்களையே ஏற்க மறுக்கின்றீர்கள்.

எனவே, மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் நீயா, நானா என்ற போட்டி வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.