கடவுளை மற, உடம்பை நினை..! | மகிழ்ச்சி – 9

உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். இதே கேள்வியை ஆன்மிகவாதியிடம் கேட்டால், ‘வியர்வையும், மலமும், சிறுநீரும் நிறைந்த உடம்பை மதிக்காதே, மனதும் ஆன்மாவும்தான் முக்கியம்’ என்று உறுதிபடச் சொல்வார். உடல் உழைப்பினால் வாழும் சாதாரண மனிதனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், ‘உடம்பு உரமாயிருந்தாத்தான் வேலை செய்யமுடியும், மனசைப் பத்தி எதுவுமே தெரியாது’ என்பார்.

இப்படி ஆளுக்கு ஒன்றாகச் சொல்லும்போது சரியானதை கண்டுபிடிப்பது எப்படி?

வெகு சுலபம். இயற்கை சொல்வதைக் கேட்கவேண்டும். மனிதனைத் தவிர பிற உயிர்கள் என்ன செய்கின்றன, எதைக் கொண்டாடுகின்றன என்று பாருங்கள். விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்துமே தங்கள் உடம்பைத்தான் நேசிக்கின்றன. இந்த நியதிதான் மனிதனுக்கும் பொருத்தமானது. ஆனால் மனிதன் மட்டும் மனசுக்கு இறக்கை கட்டிவிட்டு, இயற்கையை மீறி பறக்க நினைக்கிறான். அதனால்தான் மனித வாழ்க்கை இத்தனை சிக்கலாக இருக்கிறது.

வன விலங்குகள்

கணவர், மனைவி, குழந்தை கொண்ட ஒரு சிறு குடும்பம் சுற்றுலாவுக்குக் கிளம்பி, யாருமற்ற வனாந்திரத்தில் காட்டிலாகாவிற்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்கினார்கள். பகல் முழுவதும் காட்டை சுற்றிப் பார்த்தார்கள். மான்களைத் தவிர கொடிய மிருகங்கள் எதையும் பார்க்கமுடியவில்லை. புலி, கரடி போன்ற அரிய மிருகங்களைக் காண முடியவில்லையே என்று கவலைப்பட்டார்கள். இரவு வந்தது. அறையை விட்டு வெளியே வரவேண்டாம், எந்தக் காரணம் கொண்டும் விளக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துவிட்டு, தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் வெளியே ஏதோ சத்தம் கேட்கவே, மூவரும் திடுக்கிட்டு விழித்தார்கள். ஹெஸ்ட் ஹவுஸை சுற்றி சில மிருகங்கள் நடமாடும் சத்தம் கேட்டது. ஆர்வக்கோளாறு காரணமாக ஜன்னலை கொஞ்சமாகத் திறந்து பார்த்தார்கள். ஆச்சர்யப்படும் வகையில் வாசலில் ஏழெட்டு மான்கள் நின்றுகொண்டிருந்தன. அதில் ஒரு குட்டி மானும் இருந்தது. அவற்றைப் பார்த்ததும் குடும்பத்தினருக்கு சந்தோஷம் தாளவில்லை. ஜன்னல் வழியே சில காரட் எடுத்து நீட்டினார்கள். சந்தோஷமாக மான்கள் போட்டி போட்டு சாப்பிட்டன. அதைப் பார்த்ததும் குஷியாக போட்டோ எடுக்க ஆசைப்பட்டார்கள். அக்கம்பக்கம் வேறு எந்த மிருகமும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கதவைத் திறந்தார்கள்.

மான்களுக்கு

சந்தோஷமாக மான்களுக்கு அருகில் நின்று போட்டோ எடுத்தார்கள். திடீரென அந்த மான்கள் அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்து காதுகள் விரைத்து நிற்பதையும், அடுத்த கணம் அந்த இடத்தில் இருந்து காற்றைப்போல் விரைந்து ஓடுவதையும் பார்த்தார்கள். நடப்பது என்னவென்று அவர்கள் யோசிக்கும் முன்பே இரண்டு புலிகள் இருட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன. மகனை ஒரு புலியும், கணவரை ஒரு புலியும் கடித்துக் குதற… செய்வதறியாது அதிர்ந்து நின்றார் மனைவி. அடுத்த நொடி தன்னை காத்துக்கொள்வதற்காக வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். சிறுவன் மற்றும் கணவரின் அலறலைக் கேட்டு காட்டிலாகா அதிகாரிகள் துப்பாக்கியுடன் விரைந்துவந்தார்கள். வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில்… கணவரை கொன்று அங்கேயே போட்டுவிட்டு, சிறுவன் உடலை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டன புலிகள்.

கிடுகிடுவென நடுங்கிக்கொண்டிருந்த மனைவியை சமாதானப்படுத்தினார்கள். ஒரு கணத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்துவிட்ட விபரீதத்தை நினைத்து அவர் அழுதார். அதைவிட கணவர் மற்றும் மகன் ஆபத்தில் இருந்தபோது, அவர்களை காப்பாற்ற நினைக்காமல் ஓடிவந்து வீட்டுக்குள் புகுந்துகொண்ட சுயநலத்தை எண்ணியெண்ணி வருத்தப்பட்டு அழுதார்.

வன விலங்குகள்! –

கணவர், குழந்தைக்கு நிகழ்ந்துவிட்ட கொடுமைக்காக அந்தப் பெண் வருத்தப்படலாமே தவிர, அவர் தப்பித்த செயலுக்காக வருத்தப்படத் தேவையில்லை. ஏனென்றால் அதுதான் இயற்கை. அவருடைய இடத்தில் கணவர் இருந்தாலும், அப்படித்தான் செய்திருப்பார். மிருகங்களைப் போலவே, எந்த ஓர் உடலும், உயிரும் முதலில் தன்னை காப்பாற்றிக்கொள்ளவே முயற்சி எடுக்கும். அதன் பிறகுதான் பிறரைக் காப்பாற்றும். இந்த நேரத்தில் மனம் என்ற ஒன்றுக்கே இடம் கிடையாது. உடலுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியான பிறகுதான் மனம் செயல்படத் தொடங்கும். தீயைக் காட்டி புலிகளை விரட்டியிருக்கலாம், கதவை திறக்காமல் இருந்திருக்கலாம் என்ற யோசனைகள் எல்லாம் அதன் பிறகுதான் தோன்றும்.

எல்லோரும் இப்படித்தான் செயல்படுவார்களா…? மிருகங்களுடன் போராட மாட்டார்களா..?

ஒரு சிலருக்கு மனம் வேகமாக விழித்துக்கொள்ளும், அவர்கள் மிருகங்களுடன் போராடும் முடிவை எடுத்துப் போராடி வெல்லலாம் அல்லது செத்துப் போகலாம். ஆனால், பொதுவாக பெரும்பாலான உயிர்கள் முதலில் தன்னை பாதுகாத்துக்கொண்டு, அதன் பிறகே பிறரை காப்பாற்ற முயற்சி செய்யும்.

இந்த கதையின் மூலம் சொல்ல வருவது என்ன?

இந்த உடம்பின் முக்கியமான நோக்கம் தன்னை காப்பாற்றிக் கொள்வதுதான். வாழும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்காகப் போராடுகிறது உடல். அதனால் உடலை கும்பிடுங்கள்.  இந்த உடம்பு அழிந்துவிடும் என்ற கருத்து உண்மையல்ல. இந்த உலகில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்கிறது. அதனால் வாழும் வரையிலும் இந்த உடம்பை கும்பிடும் அளவுக்கு புனிதமாக போற்றிப் பாதுகாப்பது மனிதனின் கடமை.

தியானம்

ஆனால் உடலைவிட மனசுதானே சுத்தமானது?

உடல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் மனதால் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். கடும் பசி இருக்கும்போது எந்த சிந்தனையும் யாருக்கும் தோன்றாது. இது புரியாமல்தான் பலரும், ’மனசு சுத்தமா இருந்தா போதும், உடம்பு பற்றிய கவலை வேண்டாம்’ என்று பிதற்றுகிறார்கள். இந்த உலகில் எந்த மனசுமே சுத்தமாக இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. அப்படிப்பட்ட மனசை சுத்தமானது என்று சொல்வது மூடத்தனம்.

ஆனால் நம் முன்னோர்கள் மனசுதானே முக்கியம் என்றார்கள்?

முன்னோர்களை விடுவோம். திருமூலர் சொன்னதை அறிவோமா?

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்

றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே – என்று பாடியிருக்கிறார்.

திருமூலர்

அதாவது, ’இந்த உடல் நரை, திரை, பிணி, மூப்புக்கு உட்பட்டது என்று கேவலமாக எண்ணியிருந்தேன். ஆனால் நந்தீஸ்வரர் அருளினால், இந்த உடம்புக்குள் சிவபெருமான் இருப்பதை அறிந்துகொண்ட பிறகுதான் இதனை கோயில் என்று உணர்ந்தேன்’ என்கிறார். அதோடு நில்லாமல், ’உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், சீவன் சிவலிங்கம்’ என்றும் சொல்கிறார் திருமூலர். ’நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார் சிவவாக்கியர்.

அதனால் மனிதன் எந்தக் கோயிலுக்கும் போய் இறைவனை தேட வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் கொடுத்த இந்த உடம்பைக் கும்பிட்டால் போதும், அது இறைவனுக்கான வணக்கம். ஆரோக்கியமான உடல் படைத்தவனிடம் இருந்துதான் ஆரோக்கியமான சிந்தனை வரும். அதனால் கடவுளை மற, உடம்பை நினை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.