12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா – 2022/2023 சம்பிரதாயபூர்வமாக நிறைவடைந்தது

“விளையாட்டு மக்களின் தேசியம், மதம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைக்கிறது” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் (நவம்பர் 24) இடம்பெற்ற 12ஆவது பாதுகாப்புச் சேவை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த விளையாட்டு நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இவ்வாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் இலங்கை விமானப்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உயிரிழந்த அனைத்துப் போர்வீரர்களையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர், நிகழ்வின் வரவேற்பு உரையை ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன நிகழ்த்தினார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான விளையாட்டு வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2022/2023 ஆம் ஆண்டிற்கான 12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவம் 147 தங்கப் பதக்கங்கள், 144 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 122 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது. இலங்கை விமானப்படை இரண்டாம் இடத்தைப் பெற்றது.

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா இலங்கை ஆயுதப்படையினரின் அசாத்தியமான துணிச்சலுக்கான சான்றாகவும், விளையாட்டு வீரர்களின் உடல் வலிமையை மட்டுமல்லாது சீருடையில் உள்ள துணிச்சலான ஆயுதப்படை வீரர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது, 12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் முழுவதிலும் சிறப்பான திறமை மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்திய அனைத்து விளையாட்டு வீரர்களும் அவர்களின் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இலங்கை இராணுவப்படை விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த 8 பரசூட் வீரர்கள் இதன்போது கண்கவர் பரசூட் சாகசங்களையும் வெளிப்படுத்தினர்.

2024/2025 ஆம் ஆண்டின் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் இராணுவத் தளபதியிடம் விமானப்படைத் தளபதி அவர்கள் பாதுகாப்புச் சேவை விளையாட்டுப் போட்டிகளின் கொடியை அடையாளமாக கையளித்ததையடுத்து, நிகழ்வின் நிறைவை பாதுகாப்புச் செயலாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.