4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க அரசு அறிவுறுத்தல்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை, வெள்ளம் என இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் நாளை டிச.5 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த 4 மாவட்டங்களில் அரசுப் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

90 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல்: மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் கிழக்கு- வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு – வட மேற்கு நோக்கி நகர்கிறது. இன்று தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திராவில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தல்: சென்னையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை தொடர்வதால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ”சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் 1000க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசு முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

அதேபோல், புயல், மழை நிலவரம் சீராகும் வரை மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.