கோடிக்கணக்கான மக்களின் குரலை மத்திய அரசு நசுக்குகிறது: 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இண்டியா கூட்டணி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் ராகுல்பேசுகையில், ‘‘மத்திய அரசு எம்.பி.க்களை மட்டும் நீக்கவில்லை. அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் குரலை நசுக்கிஇருக்கிறது” என்று விமர்சித்தார். மக்களவைக்குள் இருவர், வண்ணப் புகைக் குப்பிகளுடன் நுழைந்திருக்கிறார்கள் என்றால்,அவர்களால் வேறு பொருட்களையும் கொண்டு வந்திருக்கமுடியும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, இதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன என்று இந்தியாவின் வேலையின்மையை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், “தாங்கள்தான் தேச பக்தியாளர்கள் என்று கூறும் பாஜக எம்.பி.க்கள் இந்த சம்பவத்தின்போது அவையை விட்டு ஓடிவிட்டனர். ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்றும் அதானிக்கு நாட்டின் சொத்தை தாரைவார்த்து விடலாம்என்றும் பாஜக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. பாஜக அரசுடனான எங்கள் மோதல், அன்பும் வெறுப்புக்கும் இடையிலான மோதல்” என்று தெரிவித்தார்.

டிசம்பர் 13-ம் தேதி மக்களவையில் பார்வையாளராக வந்திருந்த இருவர், திடீரென்று மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி ஓடி, வண்ணப் புகைக் குப்பியை வீசினர். அதேபோல், நாடாளுமன்ற வளாகத்தில் இருவர் வண்ணப் புகைக் குப்பிகளை வீசி அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பினர். நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலின் 22-வது நினைவுநாளன்று நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பாதுகாப்பு குறைபாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையெடுத்து 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் அதிக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.