கனகசபை விவகாரம் | தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், கோயில் தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இன்று (டிச.31) கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய 5 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: “சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்வதற்கு, கோயில் தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தடையாணை கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அதுதொடர்பாக எந்தவிதமான தடையாணையும் தரவில்லை. ஆனால், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது விருப்பத்துக்கு ஏற்ப, 4 நாட்கள் ஆருத்ரா தரிசனத்தை காரணம் காட்டி, தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை விதித்திருந்தனர்.

மோதல் போக்கு வேண்டாம் என்ற காரணத்துக்காக இந்துசமய அறநிலையத்துறை சார்பில், முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். நீதிமன்ற உத்தரவை மீறியதால், தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறபோது, நடந்த சம்பவங்களை நீதிபதியிடம் தெரியப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுத்திருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சைவத்திரு கோயில்களில் சிறந்து விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. தினந்தோறும் காலை, இரவு பஞ்சமூர்த்கள் வீதியுலா நடைபெற்றது. டிச.26 தேரோட்ட விழா நடைபெற்றது. மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி உற்சவரராக தேருக்கு செல்வார். டிச.27 முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

இந்நிலையில், டிச.25 முதல் 28-ம் வரை கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்து தீட்சிதர்கள் கனகசபையின் கதவுகளை மூடினர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன் தலைமையில் சிதம்பரம் திருக்கோயில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்க பெருமாள், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் பொது தீட்சிதர்களிடம் அரசாணையின்படி கனகசபையில் பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தடை ஆணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை பணி செய்யவிடவில்லை என்றுகூறி தீட்சிதர்கள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.