1.89 lakh policemen are mobilized for Bangladesh election duty | வங்கதேச தேர்தல் பணியில் 1.89 லட்சம் போலீசார் குவிப்பு

டாக்கா : வங்கதேசத்தில், ஜன., 7ம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அறிவித்துள்ளதை தொடர்ந்து, நாடு முழுதும், 1.89 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதம்

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு ஜன., 7ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கஉள்ளது.

‘ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தேர்தல் நியாயமாக நடக்காது. தேர்தலை நடத்த நடுநிலையான அமைப்பை அமைக்க வேண்டும்’ என, பங்களாதேஷ் தேசிய வாத கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, எதிர் வரும் பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பங்களாதேஷ் தேசியவாத கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க, வங்கதேசம் முழுதும், 1.89 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

வங்கதேச காவல் துறையில் மொத்தம், 2.13 லட்சம் பேர் பணிபுரியும் நிலையில், இதில், 1.89 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 1.74 லட்சம் போலீசார் விடுமுறை இல்லாமல் பணியில் ஈடுபடவுள்ளனர்; மீதமுள்ள 15,000 போலீசார் வழக்கமான பணியில் ஈடுபடுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

பதற்றமான பகுதிகளில் கூடுதல் அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர், ‘மப்டி’யிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலை பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்து உள்ளதாலும், பெரியளவில் பிரதான கட்சி வேறு எதுவும் இல்லாததாலும், ஜன., 7ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என, கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.