மழை பிடிக்காத மனிதனில் விஜயகாந்த் இருக்கிறாரா? – விஜய் மில்டன் பதில்

தமிழ் திரையுலகில் அனைத்து கலைஞர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் நடிகர் விஜயகாந்த். பின்னர் அரசியலில் நுழைந்து இன்னும் பொதுமக்களின் அன்பையும் அதிகம் பெற்ற அந்த நல்ல மனிதர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.. அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதை உடன் நடைபெற்ற முடிந்தன. அவருடன் பழகிய, பணியாற்றிய திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

கடந்த வருடத்தில் இருந்து இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தான் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' என்கிற படத்தில் நடிகர் விஜயகாந்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என கூறி வந்தார். ஆனால் அவர் அப்படி கூறி வந்த நேரத்தில் விஜயகாந்த்தின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டு நடப்பதற்கே இன்னொருவரின் துணையை நாட வேண்டிய நிலையில் தான் இருந்தார். அதனால் விஜயகாந்த்தை நடிக்க வைக்க போவதாக விஜய் மில்டன் எப்படி உறுதியாக கூறுகிறார் என பலரும் அப்போது ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில் விஜய் மில்டன் கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் மழை பிடிக்காத மனிதன் படத்தில் அவரை நடிக்க வைக்க இயலாமல் போனது குறித்த தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “கேப்டன் விஜயகாந்த் பலருக்கும் ஒரு உதாரணமாக இருந்தவர். அதுவும் நான் நேசிக்கும் அவருடன் எனக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. அவரை மழை பிடிக்காத மனிதன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ஒரு ரசிகராக என்னால் இயன்றவரை முயற்சி செய்தேன். அந்த கதாபாத்திரத்தை அவரது வாழ்க்கைக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக உருவாக்கி இருந்தேன். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் நடிக்க இயலவில்லை. இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து அவரிடம் கூறுவதற்காக நான் பலமுறை அவரை சென்று சந்தித்த தருணங்களை நீங்கா நினைவுகளாக என் மனதில் சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றை என் வாழ்நாள் முழுவதும் நினைவுபடுத்தி பார்த்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் விஜயகாந்த் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதே சமயம் இந்த கதாபாத்திரத்தில் விஜய் மில்டன் யாரை நடிக்க வைத்திருப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.