Karnataka Deputy Chief Ministers Investment CBI Notice to Kerala Channel | கர்நாடக துணை முதல்வரின் முதலீடு; கேரள சேனலுக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்

பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கேரளாவைச் சேர்ந்த ‘ஜெய் ஹிந்த்’ செய்தி சேனலில் செய்துள்ள முதலீடு குறித்த விபரங்களை அளிக்கும்படி, சி.பி.ஐ., ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கு

இங்கு துணை முதல்வராக இருக்கும் சிவகுமார், மாநில காங்., தலைவராகவும் இருக்கிறார்.

இவர் மீது, 2020ல் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. சிவகுமாரின் சொத்துக்கள், முதலீடுகள் தொடர்பாக தகவல் சேகரித்து வருகிறது.

இதில், கேரளாவைச் சேர்ந்த ஜெய் ஹிந்த் என்ற செய்தி சேனலில், சிவகுமார் முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ.,க்கு கிடைத்துள்ளன. எனவே, ஜெய் ஹிந்த் சேனலுக்கு, சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

பண பரிமாற்றம்

அதில், சிவகுமார், அவரது மனைவி உஷா உட்பட, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் செய்துள்ள முதலீடுகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட லாபத் தொகை, பண பரிமாற்றம், அவரது வங்கி விபரங்கள் உட்பட, அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய விபரங்களுடன், வரும் 11ம் தேதி, சி.பி.ஐ.,யின் பெங்களூரு அலுவலகத்தில் ஆஜராகும்படி, ஜெய் ஹிந்த் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெய் ஹிந்த் சேனல் நிர்வாக இயக்குனர் ஷிஜு கூறுகையில், ”சி.பி.ஐ., கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்போம்.

”நாங்கள் எந்த விதிமீறலும் செய்யவில்லை. லோக்சபா தேர்தல் என்பதால், இந்த வழக்கை மீண்டும் கிளறியுள்ளனர். தேர்தலுக்கு முன்பே, சிவகுமாருக்கு தொந்தரவு கொடுக்க முயற்சிக்கின்றனர்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.